கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 3506

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

நாளை டெல்டா மாவட்டங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. ஜனவரி மூன்றாம் நாள் தென்தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஜனவரி நான்காம் நாள் தென்தமிழகக் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகத் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்குன்றம் ஆகிய இடங்களில் 10 சென்டிமீட்டரும், ஊத்துக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் 9 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இன்று முதல் 3 நாட்களுக்குக் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments