பெருமழை குறித்து எச்சரிக்க சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டினை உடனடியாக மேம்படுத்திட முதலமைச்சர் வலியுறுத்தல்

0 3060

புயல், பெருமழை தகவல்களை முன்கூட்டியே துரிதமாக அளிக்கும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என மத்திய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் கடந்த வியாழக்கிழமை பல மணி நேரம் தொடர்ந்த கனமழையால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பெருமழை குறித்த அறிவிப்புகளை, சென்னை வானிலை ஆய்வு மையத்தால் உரிய நேரத்தில் வழங்க இயலாத நிலை உள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 30-ம் தேதி, வானிலை ஆய்வு மையம் அளித்த அறிக்கைகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில், மதியம் முதல் இரவு வரை மிகக் கடுமையான மழை பெய்ததை, முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாலை 4.15 மணிக்கு "ஆரஞ்ச் அலர்ட்" விடுக்கப்பட்ட நிலையில், அதற்குள் மிக அதிக கனமழை பெய்து, சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களின் பல பகுதிகள் மூழ்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். பெருமழை, புயல் போன்ற "ரெட் அலர்ட்" சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments