தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் உத்தரவு

0 9574

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட முதலமைச்சர், திரையரங்குகள், சலூன்கள் உள்ளிட்டவற்றிற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

தமிழகத்தில் ஓமைக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், அமைச்சர்கள், உயரதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனை அடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் , நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஜனவரி 10ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அழகு நிலையங்கள், சலூன்களில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும் என்றும் பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட முதலமைச்சர், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிப்பட்டுள்ளது. உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்களுக்கும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும் என்றும் வழிபாட்டுத் தலங்களில் தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments