குறுவை சாகுபடியில் சாதனை.. முதலமைச்சர் பெருமிதம்.!

0 2385

தஞ்சாவூரில் சுமார் 40ஆயிரம் பயனாளிகளுக்கு 237 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 90 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததோடு, 1,230 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார்.

தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கான இயந்திரம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

புனரமைக்கப்பட்ட 2ஆம் உலக போர் நினைவுச் சின்னம், ராஜப்பா பூங்கா, ராஜா மிராசுதார் மருத்துவமனையில் கண் மருத்துவமனை கட்டிடம், சரபோஜி மார்க்கெட்டில் வணிக வளாக கட்டிடம் உள்பட 98கோடி ரூபாய் மதிப்பிலான 90 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

1,230கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கும் நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கான கண்காட்சியையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் 48 ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பாண்டில் குறுவை சாகுபடி அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பே, கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது என்றார்.

வேளாண் புரட்சிக்கு வித்திடும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது எனவும், அனைத்து துறைகளில் வளர்ந்த மாநிலமாக, முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே திமுக அரசின் இலக்கு எனவும் சூளுரைத்தார்.

விவசாயிகள் புகார் தெரிவிக்க வகையில் கொள்முதல் நிலைய பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். விழாவில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், பொன்முடி, கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், சக்கரபாணி மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மொத்தம் 1084 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த கால சோதனைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய ஆண்டு பிறக்கப்போகிறது என்றும் மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் வரும் புத்தாண்டில் நிறைவேறும் என்றும் குறிப்பிட்டார். மேலும், தொடர்ந்து மக்களிடம் இருந்து பெறும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மனு இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments