சென்னை பெருநகரில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிப்பு.! தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் - மத்திய அரசு

0 3652

கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறும், தொற்று உறுதியாகும் அனைவரின் மாதிரிகளையும் சேகரித்து, மரபணு பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது...

இது தொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாடுகளில் இருந்து வருவோரையும், கொரோனா அதிகரிக்கும் பகுதிகளையும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்காணிப்பில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா உறுதியாகும் அனைவரின் மாதிரிகளையும் சேகரித்து, மரபணு பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சைக்கான மையங்கள், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, டிசம்பர் 2ஆவது வாரத்தில் 987-ஆக இருந்த பாதிப்பு, 4ஆவது வாரத்தில் ஆயிரத்து 720ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அதிகரிக்குமாறும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு உள்ளிட்ட விழாக்களின் கொண்டாட்டங்களுக்கும், திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தற்போது குளிர்காலம் என்பதால், காற்று மாசுவையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொரோனா பாதிப்பில் சுவாசப் பிரச்சினை முக்கியமாக உள்ளதை சுட்டிக்காட்டி வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments