துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்.. ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை

0 3679

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்த பறந்து வந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் பலத்த காயமடைந்தான். இதனையடுத்து, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் என்ற இடத்தில் சி.ஐ.எஸ்.எஃப் என்று சொல்லக்கூடிய மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று வழக்கம்போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென பறந்து வந்த துப்பாக்கி குண்டு புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

மற்றொரு குண்டு ஓட்டு வீடு மீது பட்டு தெறித்து கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது. கொத்தமங்கலம்பட்டியில் இருந்து நார்த்தாமலைக்கு தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்த புகழேந்தி என்ற அந்த 11 வயது சிறுவன், காலையில் வீட்டுக்குள் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த போது தலையில் குண்டு பாய்ந்துள்ளது.

ரத்தம் பீறிட்டு, அலறிதுடித்த சிறுவனை உடனடியாக குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மூளைக்கு அருகே குண்டு பாய்ந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், மேல் சிகிச்சைக்காக சிறுவன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறான்.

சுமார் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்களுக்கு மட்டுமில்லாது, புதுக்கோட்டை மாவட்ட போலீசாரும், தஞ்சாவூர் விமானப் படையினரும், என்.சி.சி. மாணவர்கரும் பயிற்சி பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. மூன்று பக்கம் மலைகளாலும், பாறைகளாலும் இந்த பயிற்சி மையம் சூழப்பட்டிருக்கும். பயிற்சியின் போது குறி தவறி துப்பாக்கி குண்டு வெளியே பறந்ததா? அல்லது பாறைகள் மீது பட்டு தெறித்ததா? என்பன உட்பட பல்வேறு கோணங்களில் விபத்துக்கான காரணம் குறித்து கீரனூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்று, பயிற்சி மையத்தில் இருந்து பறந்து வந்த துப்பாக்கி குண்டு நபர் ஒருவர் மீது பாய்ந்தது. சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்த நிலையில், அப்போதில் இருந்தே பயிற்சி மையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடந்தால், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 5 கிராம மக்களை வெளியேற்ற வேண்டும் என அந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுவன் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments