ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை..!

0 4222

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே "ரூட்டு தல" விவகாரத்தில், பேருந்து மற்றும் ரயில்களில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் மாணவர் ஒருவரின் உயிரையே பறித்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அருகேயுள்ள குருவராஜபேட்டையை சேர்ந்த குமார் என்ற மாணவர், மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. வரலாறு முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு பிற்பகலில், புறநகர் ரயிலில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

திருநின்றவூர் அருகே வரும்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர், குமார் மற்றும் அவரது நண்பர் நவீன் ஆகியோரை இழுத்துச் சென்று கேலி செய்து அடித்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது வேறு ரயில் வந்துவிட நவீன் மட்டும் ரயிலில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், எதிர்தரப்பு மாணவர்களிடம் தனியே சிக்கிக் கொண்ட குமார், சக மாணவர்களுக்கு ஆடியோ ஒன்றை பதிவு செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டு, திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் அனுப்பிய ஆடியோவில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அளித்த உயிர் பிச்சையில் தான் வாழ விருப்பமில்லை என குமார் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், மாணவரின் சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, மாணவர் குமார் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை, உடலை வாங்க போவதில்லை என கூறி, மாநிலக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர். இதையடுத்து, அங்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என காவல்துறையினர் வாக்குறுதி அளித்ததை அடுத்து, தற்கொலை செய்துகொண்ட மாணவரின் சடலத்தை அவரது பெற்ரோர் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments