ஊரே கூடிட்டாய்ங்களா ஆம்புலன்ஸ கூப்பிடு… அசால்டா எஸ்கேப் ஆகலாம்..! சவுடால் சவுமியா தப்பினார்

0 10493

அமைச்சர்களின் பெயரைப் பயன்படுத்தி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சங்களைச் சுருட்டிய பெண்ணை, சூலூர் காவல் நிலையத்தில் வைத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சுற்றிவளைத்தனர். பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் மயங்கி விழுந்தது போல நடித்து அந்தப் பெண் ஆம்புலன்ஸில் ஏறிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது .

கரூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மனைவி சவுமியா. தனக்கு பல அமைச்சர்களைத் தெரியும் என்றும், அரசுவேலை வாங்கித்தருவதாகவும் கூறி அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் இவர் தேடப்பட்டு வந்தார். கோவையில் சிக்கிய இவரை திங்கட்கிழமை மாலை ரேஸ்கோர்ஸ் போலீசார் சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பணம் கொடுத்து ஏமாந்த அப்பநாயக்கன்பட்டி பொதுமக்களும் சூலூர் காவல் நிலையம் முன்பு குவியத் தொடங்கினர். இரு வழக்கறிஞர்கள் வந்து சவுமியாவுக்கு ஆதரவாக போலீசாரிடம் பேசிய நிலையில், இரவு நேரம் என்பதைக் காரணம் காட்டி பெண்களை தற்போது விசாரிக்க முடியாது என்றும் காலை வருமாறும் கூறி சவுமியாவை சூலூர் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

வெளியே சென்றால் பொதுமக்கள் தங்களை சூழ்ந்து கொள்வார்கள் என்று அஞ்சிய சவுமியா மற்றும் அவருடன் வந்த இரண்டு வழக்கறிஞர்கள் காவல் நிலைய வளாகத்தினை விட்டு வெளியே செல்லாமல் அதிகாலை வரை அங்கேயே அமர்ந்து இருந்தனர்.

பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்களும் காவல் நிலைய வாசலில் சவுமியாவுக்காக இலவுகாத்த கிளியாக காத்திருந்தனர். சௌமியாவை வெளியே அழைத்துச்செல்ல வழக்கறிஞர்கள் வாடகை கார் ஒன்றை அங்கு வரவழைத்தனர்.

அந்த காரில் ஏறிச் செல்ல முயன்ற சவுமியாவை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிகாலை 3 மணிக்கு பின்னரும் இருதரப்பினரும் காவல் நிலைய வளாகத்தில் காத்திருந்தனர். இந்த சம்பவத்தினால் சூலூர் காவல் துறையினர் வீட்டிர்கு செல்லாமல் காவல் நிலையத்திலேயே தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  அமைச்சரை எல்லாம் தெரியும் என்று அளந்து விட்ட சவுமியா அடுத்த ராஜதந்திரத்தை கையாண்டார்.

தான் கர்ப்பமாக இருப்பதால், தனக்கு மூச்சு விட சிரமமாக இருப்பதாகவும் நெஞ்சு வலிப்பதாகவும் கூறி காவல் நிலைய வளாகத்தில் மயங்கி விழுந்தது போல நாடகமாடிய அவர். 108 ஆம்புலன்ஸை அங்கு வரவழைத்தார். அவசர ஊர்தி வந்தவுடன் அதில் ஏறி வழக்கறிஞருடன் காவல் நிலைய வளாகத்தை விட்டு தப்பி சென்றார்.

சவுமியா கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றதை அறிந்து, அவசர ஊர்தியை பின்தொடர்ந்து பொதுமக்களும் சென்றனர். இதனால் சூலூர் காவல் நிலைய வளாகம் பரபரப்பாக இருந்தது. மருத்துவமனையில் சாதாரன சிகிச்சை எடுத்துக் கொண்ட சவுமியா அங்கிருந்து கம்பி நீட்டியதாக கூறப்படுகின்றது. அதனால் போலீசார் அறிவுறுத்தியபடி காலையில் விசாரணைக்கு அவர் வரவில்லை.

ஏற்கனவே தமிழக அமைச்சர் ஒருவரின் பெயரைக்கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற சௌமியா, இராமநாதபுரம் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டவர். இதுபோல பல இடங்களில் இவர்மேல் வழக்குகள் பதியப்பட்டு இருந்தாலும், பிரபல அரசியல் வாதிகளுடன் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு பொது மக்களிடம் ஏமாற்றி பணம் பறிப்பதுடன் போலீசாரிடமும் விசாரணைக்கு ஆஜர் ஆவதாக கூறி கடுக்கா கொடுத்து தப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments