சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 4386

சென்னை பெருநகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக்நகரில் 19ஆவது தெருவில் 10பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்ட தெருவில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது எனவும், தினசரி பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.

தமிழகம் முழுவதும் 129 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய பாதிப்பான எஸ்.ஜீன் டிராப் மரபணு மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மாதிரிகள் மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் மஞ்சம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் சுமார் 500 படுக்கைகளுடன் பிரத்யேக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் படுக்கைகளை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் கூறினார். அத்தோடு 11 இடங்களில் கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது எனவும், 14லட்சம் பேருக்கு வழங்குவதற்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் இருக்கிறது எனவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments