ரெயிலுக்குள் பார்ட்டி..! மாணவ புள்ளீங்கோஸ் மறியல் அட்ராசிட்டீஸ்..! திருந்த வாய்ப்பே இல்லையோ..?

0 8912
ரெயிலுக்குள் பார்ட்டி..! மாணவ புள்ளீங்கோஸ் மறியல் அட்ராசிட்டீஸ்..! திருந்த வாய்ப்பே இல்லையோ..?

சென்னை ஆவடியில் ஓடும் ரெயிலில் கூரையை பிடித்து தொங்கிக் கொண்டு ரகளை செய்த கல்லூரி மாணவர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தி மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது..

சென்னை, வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் மாநில கல்லூரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்தனர். சிலர் ரெயில் கூரையின் பக்கவாட்டு பகுதியை பிடித்துக் கொண்டு விபரீதமான முறையில் பயணித்தனர். சிலர் கூச்சலிட்டுக் கொண்டே ரெயிலின் ஜன்னலில் நின்றபடி பயணம் செய்தனர்.

இதற்கிடையே வசீகரன் என்ற மாணவன் பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவர்களோடு ரயிலில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த மின்சார ரயில் ஆவடி ரயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது ஒரு மாணவன் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் , மின்சார ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு, அவர்கள் அபாய சங்கிலி இழுப்பதற்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவர் வசீகரன் உள்ளிட்ட 4 மாணவர்களை பிடித்து ஆவடி ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து, சக மாணவர்கள் வசீகரன் உள்ளிட்ட மாணவர்களை விடுவிக்க கோரி ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஆவடி ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் மறியலில் ஈடுபட்ட சக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் விசாரணை முடிந்த உடன் மாணவர்களை விடுதலை செய்வதாக உறுதியளித்தனர். இதனை அடுத்து, மாணவர்கள் ரயில் மறியலை கைவிட்டனர்.

போராட்டம் நடத்திய மாநில கல்லூரி மாணவர்கள் அதே ரயிலில் ஏறி சென்றனர். பின்னர், அந்த ரயில் ஆவடி அடுத்த இந்துக்கல்லூரி ரயில் நிலையம் வந்து பயணிகளை இறக்கி விட்டு கொண்டு இருந்தது. அப்போது, கல்லூரி மாணவர்கள் வசீகரன் உள்ளிட்ட மாணவர்களை விடுவிக்கப்படாததை அடுத்து மீண்டும் ரயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், தகவலறிந்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதன்பின்பு, மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வசீகரன் உள்ளிட்ட மாணவர்களை விடுதலை செய்தனர். இதன் பிறகு, சக மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்களின் இந்த அடாவடி ரகளையான ரயில் மறியல் போராட்டத்தால் மற்ற பயணிகள் பாதிக்கப்பட்டனர். மின்சாரரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கல்லூரி கெத்தை காட்டுவதாக நினைத்து ரெயிலின் கூறையை பிடித்தபடி விபரீதமாக பயணிப்பது , போலீசார் நடவடிக்கை எடுத்தால் ரெயிலை மறிப்பது என்று கல்லூரி மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர்களும், காவல்துறையினரும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments