துப்பாக்கியால் சுட்டு அரங்கேற்றப்பட்ட கொள்ளை... சிறுவனும் கூட்டாளியும் சிக்கினர்

0 3438

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஆடிட்டர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஏர் கன் துப்பாக்கியால் சுட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா படப்பிடிப்புக்குப் பயன்படும் உரிமம் தேவைப்படாத ஏர் கன் வகை துப்பாக்கியை வேறொரு வீட்டில் திருடி இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரக்கோணத்தை அடுத்த அவினாசி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ஆடிட்டர் புஷ்கரன் என்பவர், ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாக இருக்கும் தனக்குச் சொந்தமான வயல் பகுதியில் வீடு கட்டி, அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 17ஆம் தேதி நள்ளிரவு நாட்டுத் துப்பாக்கியுடன் நுழைந்த இருவர், புஷ்கரனையும் 76 வயதான அவரது பாட்டி உட்பட 3 பெண்களையும் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திவிட்டு, பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை, 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 3 பேரின் செல்போன்களையும் எடுத்துக் கொண்டு தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையர்கள் வந்து சென்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள், அப்பகுதி செல்போன் டவரில் பதிவான உரையாடல்கள் என ஆதாரங்களை சேகரித்த போலீசாருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் பால்வாய் கிராமத்திலுள்ள வங்கி ஊழியர் ஒருவரின் வீட்டில் திருடுபோன நாட்டுத் துப்பாக்கி நினைவுக்கு வந்துள்ளது.

அந்த வழக்கின் விசாரணையில் தொடர்புடைய திருவாலங்காடு - வியாசபுரம் பகுதியை சேர்ந்த சின்னராசு என்பவனைப் பிடித்து தனிப்படையினர் விசாரித்துள்ளனர். அதில் அவன் தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றினான் என்பது தெரியவந்தது.

தனக்கு உதவியாக 17 வயதான சிறுவன் ஒருவனை வைத்துக் கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் சின்னராசு ஈடுபட்டதை அறிந்த போலீசார், அந்த சிறுவனையும் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் ஏர் கன், வாள், கத்தி, லேப்டாப், ஸ்மார்ட் டிவி, கேமரா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments