ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட டி. பார்வர்ட் பிளாக் தொண்டர்கள்..! 8 கார்கள் உடைப்பு 10 பேர் கைது

0 2315

தேனி அருகே நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு சென்ற இரு அரசியல் கட்சியினர், போலீசார் முன்னிலையில் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இருவருக்கு வெட்டு விழுந்ததுடன் 8 கார்களும் உடைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.தமிழனின் 7வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த தேனிக்கு வருகை தந்த தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கும், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினருக்கும் இடையே தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மோதல் உருவானது

இந்த மோதல் விவகாரத்தில் தென் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறனின் கார் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.மேலும் தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த பாலமுருகன்,பாண்டி ஆகியோரை ஒரு சிலர் பட்டாக்கத்தியால் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த பாலமுருகன்,பாண்டி மற்றும் ரத்தக்காயம் அடைந்த இரு தரப்பையும் சேர்ந்த மேலும் 5 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தேனி நகர காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன், நிர்வாகிகள் பாலமுருகன், தமிழ்ச்செல்வன் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சங்கிலி உள்பட நிர்வாகிகள் 9 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தமிழ்தேசிய ஃபார்வர்டு பிளாக் மாநிலத் தலைவர் எம்.பி.எஸ். முருகனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த தர்மர் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலமுருகன், பாண்டி உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments