சண்டையில கிழியாத சட்டை..! வேட்டியை ஏற்றிக்கட்டி எகிறிய காங்கிரஸ் தாத்தா..!

0 3177

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியின் இரு கோஷ்டியினர் இடையே மோதல் உருவான நிலையில் காந்தி கால காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு கூட்டத்தில் ஆவேசமானதால் பரபரப்பு ஏற்பட்டது

சண்டையில் கிழியாத சட்டை கூட இருக்கலாம்..! ஆனால் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதலில் உடையாத மண்டை இல்லை..! என்னும் அளவுக்கு கோஷ்டி மோதலுக்குப் பெயர் பெற்ற காங்கிரஸ் கட்சியினர் மன்னார்குடியிலும் இரு வேறு கோஷ்டியாக மோதிக் கொண்டனர்.

முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் நடத்திவரும் காந்தியன் அறக்கட்டளை சார்பில் 75வது சுதந்திர தின ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு வந்திருந்த நிர்வாகிகள் சிலரின் கார்களில், கை சின்னம் பொறித்த காங்கிரஸ் கட்சியின் கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதனைக் கண்ட தற்போதைய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கும் அறக்கட்டளைக்கும் தொடர்பு இல்லை என்றும் அதனால் கை சின்னம் பொறித்த கொடியை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறி, மண்டபத்தை முற்றுகையிட்டு உள்ளே இருந்தவர்களை சண்டைக்கு இழுத்தனர்.

இதற்குள் தகவலறிந்து வந்த போலீசார், கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களை சமாதானம் செய்து அனுப்ப முயற்சித்தனர். அதுவரை வெளியே நின்று முழக்கமிட்ட காந்தி கால காங்கிரஸ் தொண்டர் ஒருவர், தங்களுக்கு ஆதரவாக போலீசார் வந்துவிட்ட தெம்பில், தோளில் போட்டிருந்த துண்டை உதறி தலையில் கட்டிக் கொண்டு, வேட்டியையும் மடித்துக் கட்டி ஆவேசத்துடன் கில்லி போல எகிற தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் மண்டபத்தின் இரும்பு கேட்டைப் பிடித்து ஆட்டியவாறு ஆவேசம் காட்டிய அவரை போலீசார் பிடித்து இழுக்க முயற்சிக்க, தாத்தாவின் ஆவேசம் தாறுமாறானது

சண்டை போட வந்திருந்த அந்த பத்து பேரில் அந்த காங்கிரஸ் தாத்தாவின் ஆவேசம் மட்டும் தனியாகத் தெரிந்தது. ஒரு வழியாக போலீசார் அவர்களை அப்புறப்படுத்த, பத்து பேரும் ஆவேசமாக தங்களுக்குள்ளே போட்டி போட்டுக்கொண்டு முழக்கங்கள் எழுப்பியவாறே அங்கிருந்து சென்றனர்.

சண்டைன்னு வந்துட்டா காங்கிரஸில் தாதாவோ..., தாத்தாவோ.., ரெண்டு பேரு கையுமே ஓங்கி இருக்கும் என்பதற்கு சாட்சியாக அமைந்தன இந்த காட்சிகள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments