கலவரமாக மாறிய கொண்டாட்டம்.. போலீசாருக்கு அடி,உதை, தீவைப்பு..!

0 5314
கலவரமாக மாறிய கொண்டாட்டம்.. போலீசாருக்கு அடி,உதை, தீவைப்பு..!

கேரள மாநிலத்தில் வட மாநில தொழிலாளர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வன்முறையில் முடிந்தது. மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க வந்த போலீசார் தாக்கப்பட்டனர். போலீஸ் வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொச்சி நகரின் கிழக்கம்பலம் பகுதியில் நாகலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் தங்கி உள்ளனர். கொச்சி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நிலையில், சிலர் மது போதையில் இருந்தனர்.

மது அருந்தியவர்கள் கூச்சல் போட்டபடி அந்த பகுதியை சுற்றி, சுற்றி வந்ததால்,அங்கு வசித்த மக்கள் கண்டித்தனர். இதனால், தொழிலாளிகளுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு மாறியது.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் கற்களை வீசி தாக்கியதுடன், இச்சம்பவத்தை செல்போனில் வீடியோப்பதிவு செய்தவர்களையும் அடித்து உதைத்தனர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த மோதல் மேலும் முற்றிய நிலையில் பதற்றம் நிலவியது

பண்டிகை நாள் என்பதால் குன்னத்துநாடு காவல் நிலையத்தில் குறைந்த அளவே போலீசார் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் மட்டும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட தொழிலாளர்கள், காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களின் வாகனத்திற்கு தீவைத்தனர்.

இந்த தாக்குதலில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலுவா காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார், தொழிலாளர்கள் 100 பேரை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments