ஒமைக்ரான் பாதிப்பு.. கண்காணிப்பு தீவிரம்.. அமைச்சர் தகவல்!

0 2106

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு அதேவகை தொற்று பாதிப்பு இருக்குமோ.? என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

சென்னை, மடுவின்கரை பகுதியில் 16-வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்ற அவர், 84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55 புள்ளி 85 சதவிகிதம் பேர் 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளதாக கூறினார்.

இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இதுவரை 34பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதில் 12 பேர் குணமடைந்திருப்பதாகவும் 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், ஒமைக்ரான் தொற்று பாதித்தோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு அறிவித்தபடி தமிழகத்தில் 15முதல் 18வயதுக்கு உட்பட்டோருக்கு ஜனவரி 3-ந் தேதிமுதல் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கும் எனவும், 60வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்கள், இணை நோயுள்ளவர்களுக்கு ஜனவரி 10-ந் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் கூறிய அமைச்சர், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.

மேலும், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறியோர் மீது இதுவரை 105கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments