சிறார்களுக்கு தடுப்பூசி அறிவித்தார் பிரதமர் மோடி.!

நாடுமுழுவதும் வரும் 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ள பிரதமர் மோடி, முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்படும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் நிலையில் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
முகக் கவசம் அணிவது, கைகளை முறையாக கழுவுவது போன்றவற்றை செய்யத் தவறக்கூடாது என்று பிரதமர் அறிவுறுத்தினார். நாட்டில் கொரோனா பாதிப்புகள் உயர்ந்தால் அதனை எதிர்கொள்ள 18 லட்சம் தனிப்படுக்கைகளும்,குழந்தைகளுக்காக பிரத்யேகமாக 90,000 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், மாநில அரசுகளுக்கு 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நாடு முழுவதும் தகுதி வாய்ந்த 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாகவும், 61 சதவிகிதம் பேர் இரண்டு டோஸ்களையும் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தடுப்பூசிகளை அதிகளவில் செலுத்திக்கொண்டதால் கொரோனாவுக்கு எதிரான போரில் நாடு வெல்ல முடிந்தது என பேசினார்.
மேலும், நாட்டில் விரைவில் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்துகளுக்கும், டி.என்.ஏ. அடிப்படையிலான தடுப்பூசிக்கும் விரைவில் ஒப்புதல் வழங்கப்படும் என குறிப்பிட்ட அவர், தற்போதையை சூழலில் நாட்டு மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை என அறிவுறுத்தினார்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் 15 முதல் 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனை அடுத்து, நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்கும் என அவர் குறிப்பிட்டார். முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என மோடி உரையாற்றினார்.
Comments