ஒமைக்ரான் பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள்?

0 4989

ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், இரவு நேர ஊரடங்கால் பயனில்லை என மருத்துவக் குழு பரிந்துரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உட்பட தமிழகத்தில் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தொற்று பரவலை தடுப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநர் பிரதீப் கவுர் ஆகியோரும் காணொளி மூலம் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கூட்டம் அதிகம் கூடும் இடங்கள், கடை வீதிகளில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆலோசனை முடிவில், மருத்துவக் குழு சில பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இம்மாத இறுதியுடன் நிறைவுபெறும் மருத்துவ பணியாளர்களின் ஒப்பந்த காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இரவு நேர ஊரடங்கால் பயனில்லை எனவும், பொது இடங்களான வணிக வளாகம் உள்ளிட்ட கூட்டம் கூடும் இடங்களில் முககவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை கடுமையாக்கவும், மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு பத்து சதவீதம் என்ற அளவில் நெருங்கும் பட்சத்தில், ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கலாம் என்று பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் அதனால் ஏற்படும் நோய் பாதிப்பும், இறப்பு விகிதமும் குறைவாகவே இருக்கும் என கூறப்படும் நிலையில், அவசர கட்டுப்பாட்டு மையங்களை மீண்டும் தயார் நிலையில் வைத்திருக்கவும் மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments