முகவரியை மாற்றிக் கொடுத்து ஸ்விக்கி டெலிவரி பாயிடம் வம்பு.. போலீஸ்காரர் தாடை உடைந்தது..! உணவை குப்பையில் வீசியதால் ஆத்திரம்..!

0 7728
முகவரியை மாற்றிக் கொடுத்து ஸ்விக்கி டெலிவரி பாயிடம் வம்பு.. போலீஸ்காரர் தாடை உடைந்தது..!

சென்னையில் உணவு ஆர்டரின் போது முகவரியை தவறாக பதிவிட்டுவிட்டு, தாமதமாக வந்ததாக கூறி வம்பு செய்த போலீஸ்காரரை, ஸ்விக்கி டெலிவரி ஊழியர் தாக்கியதில் போலீஸ்காரருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது...

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் ஜார்ஜ் பீட்டர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது காவலர் ஜார்ஜ் பீட்டர், ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி செயலியில் சிக்கன் 65 மற்றும் போன்லெஸ் சிக்கன் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்தவர் காவல் நிலைய முகவரியில் இருந்து தனது வீட்டு முகவரிக்கு மாற்றாமல் மறந்து போய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் காவலரின் உணவை டெலிவரி செய்ய வந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர் கார்த்திக் வீரா, முதலில் காவல் நிலையம் சென்றுள்ளார். அங்கு விசாரித்து விட்டு பின்னர் ரைட்டர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது காவலர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உணவு டெலிவரி செய்ய வந்த கார்த்திக் வீராவிடம் ஏன் உணவு தாமதமாக கொண்டு வரப்பட்டது ? என கேட்டு ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கொடுத்த உணவையும் குப்பையில் தூக்கி வீசியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீஸ்காரர் கார்த்திக் வீராவை தாக்கி உள்ளார். அலைக்கழித்ததோடில்லாமல், உணவையும் குப்பையில் வீசி போதையில் தன்னை ஆபாசமாக பேசி தாக்கிய ரைட்டரை, தனது கையில் இருந்த தலைகவசத்தால் கார்த்திக் வீரா தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜார்ஜ் பீட்டர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது முகத்தாடை மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, ரைட்டரின் புகாரின் பேரில் உணவு டெலிவரி ஊழியர் கார்த்திக் வீராவை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காவலர் மதுபோதையில் தன்னை முதலில் தாக்கியதாகவும் பதிலுக்கு தானும் தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் வீராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

முகவரியை மாற்றிக் கொடுத்துவிட்டு மது போதையில் வம்பிழுத்து, உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய ரைட்டர் ஜார்ஜ் பீட்டர் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரத்தில் போலீஸ் ரைட்டர் போதையில் செய்த அடாவடியை வீடியோவாக எடுத்து, தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஸ்விக்கி டெலிவரி ஊழியர், முறையாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments