தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

0 7128

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 34ஆக அதிகரித்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள டி.எம்.எஸ்.வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ஆபத்தில் உள்ள அதாவது ஹை ரிஸ்க் பட்டியலில் உள்ள 12 நாடுகளில் இருந்து தமிழகம் வந்த மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும், அதில், எஸ்.ஜீன் ட்ராப் என்று சொல்லக்கூடிய ஒமைக்ரான் அறிகுறி தென்பட்ட 57 பேரின் மாதிரிகள் அடுத்தக்கட்ட மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதியாகியுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

ஒமைக்ரான் தொற்று உறுதியானவர்களில் 30 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் கேரளவையும் எஞ்சிய 3 பேர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் கூறினார். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையிலும், கிலஸ்டர் ஏரியாக்களில் வசிப்போர் என்ற அடிப்படையிலும் சோதனை செய்ததில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவர்களுக்கு முதல்நிலை பாதிப்பான லேசான, அறிகுறிகளற்ற நிலையிலேயே தொற்று இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 16 வயது சிறார்கள் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக்கவும் அந்ததந்த ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே, ஒமைக்ரான் பாதித்து கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நைஜீரியாவில் இருந்து வந்து ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நபரும், அவரது சகோதரி, சகோதரியின் மகள் ஆக்யோரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

அவர்களை வீட்டுக்கு வழியனுப்பி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால், அவரது வீட்டிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments