பசியால் இறக்கவில்லை சதியால் இறந்த சிறுவன்.. திடுக்கிட வைத்த சிசிடிவி காட்சி..!

0 9169

விழுப்புரத்தில் 5 வயதுச் சிறுவன் பசியால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவனை இருவர் தூக்கிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவிலுக்குள் உயிரோடு தூக்கிச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக திருப்பிய திகில் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

விழுப்புத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில், 5 வயதுச் சிறுவனின் சடலம் கடந்த 15ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த சிறுவனின் பிணக்கூறாய்வில் அந்த சிறுவன் உணவு சாப்பிடாமல் இருந்ததாகவும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து சிறுவன் பசிக்கொடுமையால் பட்டினிச்சாவு அடைந்ததாக தகவல் பரவியது. பசி என்று கையேந்தினால் இல்லை யென்று சொல்லாது கொடுக்கும் கருணை உள்ளம் கொண்டோர் வாழும் தமிழகத்தில் பட்டினிச்சாவு எப்படி ? என்று கேள்வி எழுந்த நிலையில் கடந்த 7 நாட்களாக சிறுவன் எப்படி இறந்தான் ? என்பது குறித்து, 4 தனிப்படைகள் அமைத்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், அந்தச் சிறுவனை ஒருவர் தூக்கிச்செல்லும் இரண்டு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிசிடிவி காட்சியில் காளியம்மன் கோயில் வழியாக இரண்டு பேர் ஒரு சிறுவனை சுமந்து வருவது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் சிறுவனை தோளில் ஒரு பக்கமாக உட்கார வைத்து, உயிரோடு தூக்கிச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

கோவிலில் இருந்து வெளியே வந்த பின்னர் மற்றொரு சிசிடிவி காட்சியில், சிறுவன் தோள் மீது சாய்ந்து படுத்து இருப்பதைப் போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. கோயிலுக்குச் சென்றபோது, சிறுவன் உயிரோடு போயிருக்கிறான் என்றும் கோயிலில் இருந்து வந்தபோது, சிறுவன் உயிரோடு இல்லை என்பதை, இந்த சிசிடிவி காட்சிகள் உணர்த்துவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சிறுவன் உடுத்தியிருந்த உடையானது, அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு சீருடை என்பதை அடையாளமாகக் கொண்டு இந்த சிறுவன் யார் ? என்று தீவிர விசாரணை நடத்தியும் என்பது இதுவரையில் கண்டறியப்பட முடியவில்லை. இதையடுத்து விழுப்புரம் மட்டுமின்றி அக்கம் பக்கத்து மாவட்டங்களிலும் மாயமான சிறுவர்களின் விவரத்தை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த சிறுவனை தூக்கிச்சென்ற நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவிய நிலையில் உடலில் எந்த ஒரு காயமும் இல்லாததால் சிறுவனை யாராவது கடத்திச்சென்று பட்டினிபோட்டு கொலை செய்தார்களா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments