தட்டு தடுமாறி தள்ளாடி வந்த சீட்டிங் சிவசங்கர்..! உடலுக்குள் இத்தனை வியாதிகளா ?

0 3029
தட்டு தடுமாறி தள்ளாடி வந்த சீட்டிங் சிவசங்கர்..! உடலுக்குள் இத்தனை வியாதிகளா ?

எட்டு போக்சோ வழக்குகள், இரண்டு பாலியல் வழக்குகள் உள்ளிட்ட 10 வழக்குகளில் சிக்கி உள்ள பாபா சிவசங்கர், தனக்குக் கண்பார்வை போய்விட்டதாகக் கூறி, கருப்பு கூலிங்கிளாஸுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். ஜாமீன் பெறுவதற்காக, கைதானதில் இருந்து சிவசங்கர் பாபா செய்துவந்த தில்லு முல்லுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

ஆசிரமம் என்ற பெயரில், வயதுக்கு மீறி தாறுமாறாக ஆட்டம் போட்டதால், தள்ளாடும் வயதில் சிறைக்கம்பி எண்ணி வருகிறார் பாபா சிவசங்கர்..!தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஏற்கனவே 6 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிப்புக்குள்ளான மேலும் இரு மாணவிகள் காவல் துறையில் புகார் அளித்திருப்பதால், அந்த இரு வழக்குகளிலும் மீண்டும் கைது செய்யப்பட்ட சிவசங்கரை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்

போலீஸ் வேனில் இருந்து கருப்பு கூலிங்கிளாஸ் உடன் இறங்கி வந்த சிவசங்கர், தட்டுத் தடுமாறி தள்ளாடியபடியே நடந்து வந்தார். பெண்கள் சிலர் அவரை நோக்கி கை அசைத்தவாறு வெளியே நின்றனர்.

இந்த வழக்கிலும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார் சிவசங்கர். 6 கொலை வழக்குகளில் சிக்கிய ஆட்டோ சங்கர் பாணியில், அடுக்கடுக்கான பாலியல் வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிவசங்கர், எப்படியாவது ஜாமீனில் வெளியே வந்து விட வேண்டுமென்று, கைதான காலக்கட்டத்தில் இருந்து பகீரத பிரயத்தனம் செய்து வருவது, அவர் சொல்லும் டிசைன் டிசைனான பொய்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தன் மீது தெரிவிக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், தனக்கு ஆண்மையே இல்லை என்றும் முதன்முதலாக ஜாமீன் கேட்டு கதை அளந்து விட்ட சிவசங்கரிடம் , 'உங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதே?' என்று கேள்வி கேட்டு அரசுத் தரப்பு மடக்கியது. அதனை தொடர்ந்து தனக்கு இருக்கும் நோய்களைக் காரணம் காட்டி ஜாமீன் பெறத் துடித்தார் சிவசங்கர்.

ஆரம்பத்தில், தனக்கு குடலிறக்க நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் நடக்க இயலாது என்று கூறியதால், வீல் சேரில் அழைத்து வந்தனர் போலீசார். நீரிழிவு நோய் காரணமாக, சர்க்கரையின் அளவு கூடுதலாக இருப்பதாகவும், தனக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மூட்டு வலி காரணமாக நடக்க இயலாது என்றெல்லாம் கதை சொல்லியும் பலனில்லாத நிலையில், தனக்கு கண்பார்வை மங்கி விட்டதாகவும், கண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி சிறைக்குள் நடித்து வரும் சிவசங்கர், அதற்காகவே கருப்பு கூலிங்கிளாஸை அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு வந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

8 போக்சோ வழக்குகள், 2 பலாத்கார வழக்குகள் என மொத்தம் சிவசங்கர் மீது 10 வழக்குகள் பதியப்பட்டிருப்பதால், ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக ஜாமீன் பெறுவதற்குள் சிவசங்கரின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விடும் என்றும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டால் ஜாமீன் கிடைப்பது கானல் நீராகி விடும் என்றும் காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments