அதிகரிக்கும் ஒமிக்ரான் பரவல்: இரவு நேரக் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

0 5179

ஒமிக்ரான் பாதிப்பின் எண்ணிக்கை 200-ஐக் கடந்து விட்ட நிலையில், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இரவு நேரக் கட்டுப்பாடுகள், வார இறுதி  ஊரடங்குகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், ஒடிசா போன்ற மாநிலங்களில் முதன்முறையாக ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. வெளிநாடு பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் பரவியுள்ளது.

தற்போது 14 மாநிலங்களில் 211 பேர் ஒமிக்ரான் பரிசோதனையில் பாஸிட்டிவ் ஆக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்குமாறும் மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இரவு நேரக் கட்டுப்பாடுகள், வார இறுதி ஊரடங்குகளை பரிசீலிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பூஷண் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.மாவட்ட வாரியாக சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொள்ளுமாறும் ஒமிக்ரான் பரவலை ஆரம்ப நிலையிலேயே கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பாதிப்பு மிக்க பகுதிகள், பாதிப்பு இல்லாத பகுதிகள் என தனித்தனியே பிரித்து அதற்கேற்றபடி கட்டுப்பாட்டையோ தளர்வையோ அறிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோவிட் பாதிப்பு உள்ளவர்கள் மீண்டவர்கள் என்று அனைவருடைய தகவல்களையும் பாதுகாத்து வைக்குமாறும் ஒமிக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்களை உடனடியாக சிகிச்சை அளித்து குணப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனை வசதிகள், படுக்கைகள், ஆம்புலன்சு சேவைகள் போன்ற வசதிகளை மேம்படுத்துமாறும் மாநில அரசுகளை அவர் கேட்டுக் கொண்டார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருந்துகளை கையிருப்பு வைக்கும் படியும் மாநில அரசுகளை சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments