ஆளே இல்லாத கடையில் டீ எதுக்கு? இல்லாத காலேஜில் மாணவர்கள் இருப்பதாக கணக்கு காட்டி மோசடி..!

0 9322

பட்டியலின மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் சுமார் 17கோடி ரூபாய் அளவுக்கு மெகா முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் இல்லாத கல்வி நிறுவனங்களில் 592 பட்டியலின மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

2011-2014 வரையிலான காலகட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் சுமார் 17கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தணிக்கைத்துறை அறிக்கை மூலம் தெரியவந்தது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 52கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள் மீது வழக்குப்பதிந்த லஞ்ச ஒழிப்புத்துறை, விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஒவ்வொரு இடத்திலும் எந்த மாதிரி மோசடி நடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக இல்லாத கல்வி நிறுவனத்தையே இருப்பதாக போலி ஆவணங்கள் மூலம் உருவாக்கி, 592 பட்டியலின மாணவர்கள் படிப்பதாக கணக்கு காட்டி மோசடி செய்தது கணக்கு தணிக்கையில் அம்பலமாகி உள்ளது.

கொளக்காநத்தத்தில் சக்தி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி என்ற பெயரில் கல்லூரி செயல்பட்டு வருவதாகவும், அதில் 157 பட்டியலின மாணவர்கள் படிப்பதாகவும் போலி ஆவணங்களை தயாரித்து, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலகம் மூலம் 16 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வாங்கி முறைகேடு செய்ததாக தணிக்கையில் தெரிய வந்து உள்ளது.

இதேபோல், டி.கொளத்தூரிலும் பாலாஜி பாராமெடிக்கல் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி என்ற பெயரில் கல்லூரி செயல்பட்டு வருவதாகவும், அதில் 134 பட்டியலின மாணவர்கள் பயில்வதாகவும் கணக்கு காட்டி 14லட்சம் பணம் மோசடி செய்ததை தணிக்கைத்துறை கண்டறிந்துள்ளது.

இதுதவிர, படிப்பை பாதியில் விட்டுச் சென்ற மாணவர்கள் பெயரில் கல்வி உதவித் தொகை, ஒரே மாணவருக்கு ஒரே ஆண்டில் பலமுறை கல்வி உதவித்தொகை, வெவ்வேறு அடையாள எண்களை கொண்டு, ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்காமல் கல்வி நிறுவனத்தின் சொந்த செலவினங்களுக்கு பயன்படுத்தியது, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மட்டுமே பெற தகுதியான உதவித் தொகையை இதர பிரிவு மாணவர்களுக்கு வழங்கியது உள்ளிட்ட முறைகளில் மோசடிகள் நடைபெற்றதாகவும் தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments