செல்போனில் ஆபாச படமெடுத்து மிரட்டல்... மாணவிகளின் மானம் காக்க கொலை.. திருவள்ளூரில் ஒரு திகில் சம்பவம்..!

0 3957

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கல்லூரி மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், அந்த மாணவன் பள்ளி மாணவிகள் இருவரை தனது செல்போனில் ஆபாசமாகப் படமெடுத்ததும் மாணவிகளின் நண்பர்கள் அந்த செல்போனைக் கேட்டுச் சென்றபோது நடந்த தகராறில் கொலை நடந்ததும் தெரியவந்துள்ளது.

பொன்னேரி அடுத்த பெரிய ஒபுளாபுரம் அருகே இரு நாட்களுக்கு முன் ஏரிக்கரையோரத்தில் உள்ள குப்பை மேடு பகுதியில் ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் முடி, பற்கள் உள்ளிட்டவை கிடப்பதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு செய்ததில் ரத்த வெள்ளத்தில் இளைஞரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் பிரேம் குமார் என்பதும், 20 வயதான அவர் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மீனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த பிரேம்குமாரின் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். போலீஸ் விசாரணையில் கல்லூரி மாணவர் கொலை தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

கொலை செய்யப்பட்ட பிரேம்குமார், ஓட்டேரியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை இருவேறு காலக் கட்டங்களில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் மாணவிகளுடன் நெருங்கி பழகி வந்த பிரேம்குமார், இருவரையுமே கைவிட்டு விட்டு, நெருங்கி பழகிய தருணங்களில் எடுத்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு சிறுக, சிறுக பணம் பறித்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணம் தர மறுத்த மாணவிகளிடம் ''உங்களின் ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன்'' எனக் கூறி மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

பிரேம்குமார் கேட்கும் போதெல்லாம் பயந்துபோய் மாணவிகள் இருவரும் பணம் கொடுத்துக் கொண்டே இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவனது தொல்லை எல்லை மீறி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த மாணவிகள், இருவரும் பேசி முடிவெடுத்து தங்களுக்கு தெரிந்த இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அசோக் என்பவனிடம் நடந்தவற்றை கூறி, எப்படியாவது செல்போனை மட்டும் வாங்கித் தருமாறு கூறியிருக்கின்றனர். மாணவிகளுக்கு உதவுவதாக உறுதி அளித்த அசோக், அவனை ரகசியமாக பேசி வரவழைக்க கூறியுள்ளான்.

திட்டமிட்டபடி சம்பவத்தன்று, மாணவிகள் இருவரும் பணம் தருவதாக கூறி பிரேம்குமாரை செங்குன்றம் டோல்கேட்டுக்கு வருமாறு அழைத்திருக்கின்றனர். அதன்படி, தனது நண்பன் பிரவீனுடன், அங்கு வந்த பிரேம்குமாரை அடையாளம் காட்டி விட்டு மாணவிகள் இருவரும் சென்று விட்ட நிலையில், அசோக் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முதலில் பிரேம்குமாரை தாக்கி, செல்போனை பறித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, பிரேம்குமார் செல்போனை கொடுக்காததால் ஆத்திரமடைந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

டோல் கேட் பகுதியில் கொலை செய்துவிட்டு, சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெரிய ஒபுளாபுரம் ஏரிக்கரையில் சடலத்தை புதைத்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளான் அசோக். முன்னதாக சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய பிரவீன் அளித்த தகவலின் பேரில் பிரேம்குமாரின் தந்தை ஓட்டேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் படி நடத்தப்பட்ட விசாரணையில் தான் பிரேம்குமார் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட மாணவிகள் இருவரிடமும் விசாரணை நடத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்த போலீசார், மற்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இதுபோன்ற சிக்கல்களை சந்திக்க நேரும் மாணவிகள், இளம்பெண்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்து அவர்கள் மூலமாக காவல்துறையினரை அனுகி பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டுமே தவிர, தவறான நபர்களின் வழிகாட்டுதல்களை பின் தொடர்ந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments