ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எஸ் -400 வான் பாதுகாப்பு சாதனத்தை எல்லையில் நிறுத்தியது இந்திய ராணுவம்

0 2708

ரஷ்யாவிடம் இருந்து புதிதாக வாங்கப்பட்ட அதி நவீன வான்வெளி பாதுகாப்பு சாதனத்தை பஞ்சாப் எல்லையில் இந்திய ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் 400 கிலோ மீட்டருக்கு அப்பால் வரும் எதிரிகளின் விமானங்கள், ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் வல்லமையை இந்திய ராணுவம் பெற்றுள்ளது. 

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்கள் 5 வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த சாதனங்களை வாங்கினால் பொருளாதார தடை விதிக்க நேரிடுமென அமெரிக்க அரசு விடுத்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் 35,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்து எஸ்-400 சாதனங்களை வாங்கும் நடவடிக்கையை இந்திய முன்னெடுத்தது.

இதன் பலனாக சில நாட்களுக்கு முன்னர் எஸ் -400 சாதனம் ஒன்றை இந்திய ராணுவத்திடம் ரஷ்யா ஒப்படைத்துள்ளது. வான் வழியாகவும், கடல் மூலமாகவும் இந்த சாதனத்தின் பாகங்கள் கொண்டு வரப்பட்டு இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்டன. புதிய வான் பாதுகாப்பு சாதனத்தை இந்திய ராணுவம் பஞ்சாப் படை பிரிவிடம் ஒப்படைத்து, அதனை அம்மாநில எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது.

எஸ்-400 சாதனத்தை இயக்க இந்திய ராணுவ வீரர்கள் ரஷ்யாவிடம் பயிற்சி பெற்றுள்ளனர். எல்லையில் காவல் வீரனாக நிறுத்தப்பட்டுள்ள எஸ் -400 சாதனத்தின் மூலம் 4 விதமான ஏவுகணைகளை ஏவ முடியும். 400 கிலோ மீட்டர், 250 கிலோ மீட்டர், 120 கிலோ மீட்டர், 40 கிலோ மீட்டர் என பல்வேறு தூரத்தில் வரும் எதிரிகளின் ஏவுகணைகள்,விமானங்களையும் துல்லியமாக தாக்கி அழிக்க எஸ்-400 உதவும்.

இது தவிர எதிரிகளின் பீரங்கிகள், மற்றும் ராணுவத்தினரின் ஊடுருவலை தடுக்கும் நவீன கண்ணி வெடிகளும் இந்திய ராணுவத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்ணி வெடிகள், இந்திய நிலத்தில் அத்துமீறி கால் வைக்கும் எதிரி நாட்டு ராணுவ வீரர்களையும், பீரங்கிகளையும் சிதறடிக்கும் ஆற்றல் வாய்ந்தவை என ராணுவம் கூறியுள்ளது.

வைபவ்,விஷால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரக கண்ணி வெடிகளில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் கொண்டிருப்பதால் அவை வெடிக்கும் போது மிக அதிக சேதத்தை உருவாக்கும் என்றும், 7 லட்சம் கண்ணி வெடிகளை ராணுவத்திற்கு அளிக்க உள்ளதாகவும், இதன் மூலம் இந்திய எல்லையில் முதற்கட்ட பாதுகாப்பு வேலியாக கண்ணி வெடிகள் செயல்படும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதே போல நீர்நிலைகளின் வழியே செல்லும் பாதை, சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை ராணுவம் கடந்து செல்ல மிக வேகமாக பாலம் அமைக்கும் ராணுவ கவச பீரங்கியையும் ராணுவ தளபதி நரவானே இன்று ராணுவத்தில் இணைத்து வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments