பெண் தொழிலாளர்கள் விடிய விடிய நடத்திய போராட்டத்தை, வீடியோ கால் மூலம் முடித்து வைத்த ஆட்சியர்.!
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு வழிவகுக்கும் வகையில், வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடிய, விடிய நடைபெற்ற போராட்டத்தை, வீடியோ கால் மூலம், காஞ்சிபுரம் ஆட்சியர் முடித்துவைத்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள், பூந்தமல்லியில் உள்ள விடுதியில் தங்கி பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை விடுதியில் தயாரிக்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்ததால், 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில், 2 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிய நிலையில், ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று நள்ளிரவு முதல் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, அங்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லக்கூடிய வாகனங்கள், வாலாஜாபாத் - செங்கல்பட்டு வழியாகவும், திருவள்ளூர் வழியாகவும் திருப்பி விடப்பட்டன.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் அருகே வடகள் பகுதியிலும், வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கம் பகுதியிலும், விடுதியில் தங்கியுள்ள தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். எனினும், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், உயிரிழந்ததாக வதந்தி பரப்பப்பட்ட ஐஸ்வர்யா மற்றும் கஸ்தூரி ஆகிய பெண் தொழிலாளர்களுடன், அவர்களை வீடியோ காலில் மாவட்ட ஆட்சியர் பேசவைத்தார்.
விடுதி உணவு விஷமானதாக கூறப்படும் நிலையில், விடுதி காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வதந்தி பரப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.
அவரது அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பல மணி நேரமாக முடங்கியிருந்த போக்குவரத்து சீரானது.
Comments