கார்களை கொடுக்க மறுத்த கல் நெஞ்சம்.. மாணவர்கள் குற்றச்சாட்டு..! எட்டாக்கனியான முதல் உதவி

0 3724

திருவெல்வேலி சி.எஸ்.ஐ சபைக்கு சொந்தமான சாப்படர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில், உயிருக்கு போராடிய மாணவர்களை தங்கள் கார்களில் தூக்கிச்செல்ல மனமின்றி ஆசிரியர்கள் காலதாமதப்படுத்தியதால் உயிரிழப்பு நிகழ்ந்ததாக காயம் பட்ட மாணவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்

நெல்லை டவுணில், சி.எஸ்.ஐ சபைக்கு சொந்தமான சாப்படர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆயிரக்கணாகான மாணவர்கள் பயின்று வரும் இந்த பள்ளியில் இடைவேளை நேரத்தில் மாணவர்கள் சிறுநீர் கழிக்க சென்ற போது கழிப்பறை தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் விஸ்வரஞ்சன் , சுதீஸ் மற்றும் அன்பழகன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் .

இந்த விபத்தில் காயமடைந்த சஞ்சய், இசக்கிபிரகாஷ், சேக்அபுபக்கர்சித்திக் மற்றும் அப்துல்லா ஆகிய 4 பேர் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த சுவர் பழுதடைந்து உள்ளது என்று மாணவர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் அதனை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டிய பள்ளி மாணவர்களில் ஒரு தரப்பினர், 3 மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு பள்ளிக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.

இதற்கிடையே காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் ஒருவர், இந்த சம்பவத்தின் மீட்பு பணியில் ஆசிரியர்கள் எந்த அளவுக்கு மெத்தனமாக நடந்து கொண்டனர் என்பதை தனது உறவினர்களிடம் விவரித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஒரு மாணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது அவரை மீட்டு தங்களது காரில் ஏற்றி செல்ல மனமில்லாமல் சுற்றி நின்று கொண்ட்யிருந்த ஆசிரியர்களின் கல் நெஞ்சத்தால் , ஆம்புலன்சுக்காக காத்திருந்த நேரத்தில் அந்த மாணவர் உயிரிழந்ததாக வேதனையுடன் தெரிவித்தான். அந்தப்பள்ளியில் வேலை பார்க்கின்ற பெரும்பாலான ஆசிரியர்கள் கார் வைத்திருபதாகவும் அந்த மாணவன் சுட்டிக்காட்டினார்

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறந்த மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் , காயம் அடைந்த மாணவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் உடனடி உதவித் தொகையாக வழங்குமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சட்டசபை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.

இதனிடையே இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வரை இறந்த மாணவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அப்பாவு, ராஜகண்ணப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றம் கட்டிட ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர்.

பின்னர் சபாநாயகர் , அமைச்சர் , ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மூன்று மாணவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினர்களிடம் ஆறுதல் தெரிவித்து அரசின் நிவாரண உதவியையும் வழங்கினர் . தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் விசாரித்ததுடன் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறினர் . இந்த சம்பவத்தில் வேறுயாரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், கட்டிட தரம் குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார் .

பள்ளிக்கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சாப்படர் பள்ளியை மறுஉத்தரவு வரும் வரை மூடி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்க்கிடையே விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டுச்செல்வதில் மெத்தனம் காட்டிய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் செல்வக்குமார், கட்டட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோரை வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட நீதித்துறை நடுவர் ஜெய்கணேஷ் உத்தரவிட்டார். மேலும் விசாரணையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வியை, மருத்துவமனை சென்று விசாரித்த நீதிபதி சிகிச்சைக்கு பின் அவரையும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments