திருநெல்வேலியில் தனியார் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலி

0 7064

திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் மூன்று மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளி நூறாண்டுக்கு மேல் பழைமையானது. அரசு உதவி பெறும் இந்தப் பள்ளி தென்னிந்தியத் திருச்சபையின் திருநெல்வேலித் திருமண்டலத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 10.50 மணியளவில் பாட இடைவேளையின்போது மாணவர்கள் சிறுநீர் கழிக்க மைதானத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றனர். அப்போது கழிவறை வாயிலின் முன்னிருந்த மறைப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய எட்டாம் வகுப்பு மாணவன் விஸ்வரஞ்சன், ஒன்பதாம் வகுப்பு மாணவன் அன்பழகன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 4 மாணவர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் உயிரிழந்த மாணவர்களின் உடல்களையும், காயமடைந்த மாணவர்களையும் மீட்டுப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மாணவன் சுதீஷ் மருத்துவமனையில் உயிரிழந்தான். மற்ற 3 மாணவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் ஏராளமானோர் பள்ளிக்குத் திரண்டு வந்தனர். இதையடுத்துப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வீட்டுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. ஒருசில மாணவர்கள் வீட்டுக்குச் செல்லாமல் மைதானத்தில் அமர்ந்திருந்தனர். மாநகரக் காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் நிகழ்விடத்துக்கு வந்து பார்வையிட்டதுடன், பெற்றோர்களையும் மாணவர்களையும் அமைதிப்படுத்தி வீட்டுக்குச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்குப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார். உரிய சிகிச்சைகளை விரைந்து அளிக்கும்படி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் வலுவான அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், இதுகுறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

சிறப்புக்குழு அமைத்து மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் கட்டடங்களின் உறுதித் தன்மை குறித்து 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

சுவர் இடிந்து விழுந்த விபத்து குறித்து வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியை ஞானசெல்வியை அழைத்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதனிடையே உயிரிழந்த மாணவர்கள் மூவரின் குடும்பங்களுக்குத் தலா பத்து இலட்ச ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் குடும்பங்களுக்குத் தலா மூன்று இலட்ச ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவர்கள் விஸ்வரஞ்சன், அன்பழகன், சுதீஷ் ஆகியோரின் உடல்கள் பாளையங்கோட்டை மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டன.

கூறாய்வுக்குப் பின் மாணவர்களின் உடல்களுக்குச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் உடல்களைப் பெற்றோரிடம் ஒப்படைத்ததுடன், அரசு அறிவித்த பத்து இலட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments