பாலியல் புகாரை உடைத்து பழைய பன்னீர் செல்வமாய் பள்ளிக்கு வந்த அறிவியல் அய்யா..! மாணவ மாணவிகள் வரவேற்பு
கரூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பாடம் நடத்தும்போது ஆபாசமாக வகுப்பு எடுத்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர், தன் மீது சுமத்தப்பட்டது வீண்பழி என்பதை அதே பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆதரவுடன் முறியடித்து மீண்டும் அதே பள்ளியில் சேர்ந்தார்.
பணிக்கு வந்த ஆசிரியருக்கு கிராம மக்கள் மாலை அணிவித்தும், மாணவர்கள் கைகளை தட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்து ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி பாகநத்தம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் என்பவர் அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தினை இருபால் மாணவர்கள் பயிலும் வகுப்பறையில் மிகவும் ஆபாசமாகவும், மாணவர்களின் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பாடம் நடத்துவதாக தலைமை ஆசிரியை தெரிவித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கு அங்கு படிக்கின்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்
இதன் மூலம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி தங்கள் கிராமத்தின் பெயரையும், பள்ளியின் பெயரையும் அவமானப் படுத்தி விட்டதாக கூறிய மாணவர்களின் பெற்றோர் , சம்பந்தப்பட்ட ஆசிரியர் பன்னீர் செல்வம் கடந்த 14 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருவதாகவும், இதே பாடத்தைத்தான் மாணவர்களுக்கு அவர் எடுத்து வருகின்றார் என்றும் அப்போது இல்லாத குற்றச்சாட்டு இப்போது மட்டும் எப்படி வந்தது எனக் கூறி ஒரு நாள் முழுவதும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் ரமணி, உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தெரிவிப்பதாகவும், அவர்கள் விசாரணை நடத்துவார் என கூறி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளும் ஆசிரியர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கி பல்வேறு ஆவணங்களை காண்பித்து போராட்டத்தில் இறங்கினர்.
தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் தான் அந்த பாடம் எடுக்கப்பட்டது, வகுப்பு சிறப்பாக எடுக்கப்பட்டது என தலைமை ஆசிரியை கையெழுத்திட்டுள்ளதையும், நவம்பர் மாதத்திற்கான பாடத்தை தான் அவர் எடுத்தார் என்பது போன்ற ஆதாரங்களை அடுக்கடுக்காக சுட்டிக்காட்டினர்.
இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பெயரில் மாவட்ட கல்வி அலுவலர் ராகவன் தலைமையில் 2 வட்டாரக் கல்வி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் மீண்டும் பள்ளியில் விசாரணை துவக்கினர்.
மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தாக்கல் செய்தனர். விசாரணையில் அறிவியல் ஆசிரியர் பன்னீர் செல்வம் மீது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது உறுதியானது. ஆசிரியர் பன்னீர் செல்வத்தின் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக தலைமை ஆசிரியை தனலெட்சுமியால் இந்த பொய்யான புகார் எழுந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து ஆசிரியர் பன்னீர் செல்வத்தின் தற்காலிக பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு வியாழக்கிழமை மீண்டும் அதே பள்ளியில் சேர்ந்து பணியாற்றிட ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பணியாணையை பெற்றுக் கொண்ட ஆசிரியர் பன்னீர் செல்வம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளுடன் பள்ளிக்கு வருகை தந்தார்.
பள்ளிக்கு வந்த ஆசிரியருக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்பு, அனைத்து ஆசிரியர்கள், ஆசிரிய சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கைகளை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Comments