கற்குவேல் அய்யனின் ஒரு பிடி மண்ணுக்காக மல்லுக்கட்டிய பக்தர்கள்..! செல்வம் பெருகும் என நம்பிக்கை

0 3597

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்தது. ஒரு கைப்பிடி மண்ணுக்காக போலீசுடன் மல்லுக்கட்டிய பக்தர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சிங்கம் படத்தில் இடம் பெற்ற காட்சியை போல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து மக்களின் உடமைகளை களவாடிச்சென்ற கொள்ளையர்களை தேரிக்குள் வைத்து வெட்டி சாய்த்ததாக கூறப்படும் கற்குவேல் அய்யனாரை தென் மாவட்ட மக்கள் காவல் தெய்வமாக வழிப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை நினைவு கூரும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர் வெட்டு திருவிழா நடத்தப்படுகின்றது. குங்குமம் பூசப்பட்ட இளனீரை கள்ளராக பாவித்து தேரி மண்ணில் வைத்து அதனை கற்குவேல் அய்யனாருக்கு சாமி ஆடும் நபர் அரிவளால் வெட்டுவது வழக்கம்..!

இந்த விழாவில் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால் கடந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் விழாவில் மக்கள் கூடுவதற்க்கு தடைவிதிக்கப்பட்டது. இருந்தாலும் அதிகாலை முதலே பல ஊர்களில் இருந்தும் வந்து காத்துக்கிடந்த மக்களை ஏமாற்றி திருப்பி அனுப்ப விரும்மாத காவல்துறையினர் பலத்த கட்டுப்பாடுகளுடன் , வெகுசிலரை அனுமதித்தனர்

சரியாக சாமியாடும் நபர் இளநீரை வெட்டும் நேரத்தில் தான் , இள நீர் பட்ட தேரி மண்ணை எடுத்துச்செல்ல மக்கள் தேனீ போல ஒரே இடத்தில் குவிவார்கள் என்பதால் சுற்றிலும் தடுப்புக்கட்டைகள் அமைத்து நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரிவாளால் இளநீர் வெட்டப்பட்ட அடுத்த நொடி ஒரு கைப்பிடி தேரி மண்ணை அள்ளும் வேகத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை தாண்டி முண்டியடித்தனர் பக்தர்கள்

அந்த மண்ணை அள்ளி வீட்டில் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும், கடையில் வைத்திருந்தால் வியாபாரம் செழிக்கும், நோய் நொடி வராது என்பது அங்குள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது

பெண்கள் தங்கள் சேலை முந்தனையில் மண்ணை அள்ளி எடுத்துச்சென்றனர். பலரும் சிறு சிறு பைகளில் தேரி மண்ணை பிரசாதமாக அள்ளிச்சென்றனர்

பக்தியுடன் வந்திருக்கும் மக்களின் நம்பிக்கைக்கு இடையூறாக இல்லாமல் காவல்துறையினரும் சற்று கெடுபிடிகளை தளர்த்தி அனுப்பி வைத்தது குறிப்பிடதக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments