கவுன்சிலராகும் ஆசையில் கள்ளச் சாவி செய்து ரூ.4.50 கோடி கொள்ளை

0 2871

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் நான்கரை கோடி ரூபாய் கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட பணம் தேவைப்பட்டதால், கொள்ளையை அரங்கேற்றிய நபரை தேடி தனிப்படை போலீஸ் ஆந்திரா விரைந்துள்ளது.  

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கோபால பிள்ளை என்பவர் இண்டர்நெட் கேபிள்கள் புதைக்கும் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் நடத்தி வருகிறார். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு ஆழ்வார்திரு நகரில் உள்ளது. அந்த வீட்டின் ஒரு பகுதியில் அவரது நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வந்துள்ளது. தொழில் ரீதியான பணப் பரிமாற்றத்துக்காக அந்த வீட்டில் அவ்வப்போது பணத்தை வைத்திருப்பது கோபாலபிள்ளை வழக்கம். கடந்த மாதம் 20-ம் தேதி இவரது வீட்டில் இருந்த 4 கோடியே 50 லட்சம் ரூபாய் , 30 பவுன் நகை கொள்ளை போனது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோபால பிள்ளை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கொள்ளைக்கு பயன்படுத்திய கார் மற்றும் அதன் பதிவு எண் அதில் பதிவாகி இருந்தது. அதன் மூலம் அந்த கார் சென்ற இடங்கள் குறித்து விசாரித்து வந்தனர்.

பல நாட்கள் தொடர் தேடுதல் வேட்டைக்கு பிறகு, கொள்ளையில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த மணி, சதீஷ்குமார், சுரேஷ், ஆறுமுகம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய ஒரு கார், ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், கோபால பிள்ளையின் அலுவலக ஊழியரான சேகர், அவரது மனைவியின் சகோதரர் ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த சீனு என்ற சீனிவாசன் உள்ளிட்டோர் கூட்டுச் சேர்த்து கள்ளச் சாவி செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதிமுகவில் வட்ட செயலாளராக உள்ள சீனு, இந்த கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது.

தனது அலுவலகம் இயங்கி வரும் வீட்டின் ஒரு பகுதியில் தனது முதலாளி கட்டுக்கட்டாக பணத்தை வைத்திருப்பதாக சீனிவாசனிடம், சேகர் கூறியுள்ளார். அதைத் தெரிந்து கொண்ட சீனிவாசன் நடைபெற உள்ள சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் தாம் போட்டியிட செலவிற்கு தேவை எனவும், அதை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் தொழில் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி இந்த கொள்ளை கும்பலை ஈடுபடுத்தியுள்ளார்.

பணம் இருந்த வீட்டை திறப்பதற்கு ஆட்கள் யாரும் இல்லாத நேரம் பார்த்து சாவி செய்பவரை அழைத்து வந்து அந்த வீட்டின் உரிமையாளர் தான்தான் எனவும் சாவி தொலைந்து விட்டதாகவும் கூறி கள்ளச்சாவி செய்ய வைத்துள்ளனர்.

பின்னர் சாவி தயாரானதும் இரண்டு கார்களில் வந்து வீட்டை திறந்து கட்டுக்கட்டாக இருந்த பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். பயன்படுத்திய செல்போன், சிம்கார்டுகளை அனைவரும் மாற்றிவிட்டு புதிய செல்போன்களை வாங்கிக் கொண்டு வேறு பகுதிக்கு தப்பிச் சென்றதும், கொள்ளையடித்த பணத்தை தெரிந்த நண்பர்களிடம் கொடுத்து வைத்திருந்தும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொள்ளைக் கும்பலின் முக்கிய தலைவன் சீனிவாசன் அருள்பிரகாசம், சேகர் உட்பட மேலும் 4 பேர் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுவதால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments