சிறுமி சடலமாக மீட்பு.. எரித்துக் கொலையா? தீவிர விசாரணை..!
கொடைக்கானலில் அரசுப் பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் 11வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் கீழ்மலை கிராமமான பாச்சலூரில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 5ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுமி, கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதற்கு பிறகு சிறுமி மீண்டும் வகுப்பறைக்கு வராத நிலையில், அதே பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்த சிறுமியின் அக்கா ஆசிரியர்களிடம் சென்று தங்கையை காணவில்லை எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதற்கு ஆசிரியர்கள் ''போய் தேடு'' என அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விஷயம் தெரிந்து பெற்றோரும் தேடிய நிலையில், பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் புதர் மண்டிய பகுதியில் உடல் முழுவதும் எரிந்து கொண்டிருந்த நிலையில், சிறுமி கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் தீயை அணைத்து சிறுமியை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது.
சிறுமி கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெட்ரோல் கேன், தீப்பெட்டி கிடந்ததாக கூறப்படும் நிலையில், அத்தோடு சிறுமி அணிந்திருந்த காலணி புதர் பகுதிக்குள் கிடந்ததாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், சிறுமியை மீட்கும் போது, அவரது வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, சிறுமி பயின்ற பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களிடம் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் சிறுமியை கடைசியாக பார்த்தது யார்? உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம் நடத்திய நிலையில், போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து, உடலை பெற்றுக் கொண்டனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமி இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்ற நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments