பாகிஸ்தானை வெற்றிகொண்ட பொன்விழா ஆண்டு

0 1925

1971ம் ஆண்டில் இந்தியா மீது வலியப் போர் தொடுத்து இதே நாளில் தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான்! 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்த இந்திய வீரர்களின் பேராற்றலை விளக்கும் செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம்.

1947 ஆகஸ்ட் 14வரை ஒரே மண்ணாக இருந்த போதும், விடுதலை பெற்ற நாள்முதல் இந்தியாமீது துவேஷத்தை வெளிப்படுத்தி வருகிறது பாகிஸ்தான்! அதன் வெளிப்பாடே 1947, 1965, 1971, 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போர்கள்...

1971ல் கிழக்குப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதாகக் கூறி, இதே நாளில்தான் போரைத் தொடங்கியது பாகிஸ்தான்! காஷ்மீர் பகுதியில் தனது ஆறு சபேர் ரக விமானங்கள் மூலம் தாக்குதலைத் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக, இந்தியாவின் இரு ஜிநாட் வகை போர் விமானங்கள் முதலில் களமிறங்கின.

இந்திய விமானப்படையின் நிர்மல் ஜித்சிங் செகான் (Sekhon) என்ற வீரரின் போர்த்திறம் இன்றளவும் ஆச்சரியத்துடன் பேசப்படுகிறது.

காஷ்மீரில் அவந்திபூர் விமானப்படைத் தளத்தை அழிக்க நினைத்த பாகிஸ்தானின் முயற்சியை தீரத்துடன் போரிட்டு முறியடித்தபின் உயிர்துறந்தார். இதற்காக ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது விமானப்படையில் செகானுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது .

பதிமூன்றே நாட்களில் பாகிஸ்தானை துவம்சம் செய்து, போரை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியப் படை. எதைக் கூறி பாகிஸ்தான் யுத்தத்தை தொடங்கியதோ, அதனை இந்தியா நிறைவேற்றியே விட்டது. ஆம், கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்கதேசத்தை இதே நாளில் தனிநாடாக மாற்றியது இந்தியா.

இந்தியத் தரப்பில் 3 ஆயிரத்து 800 பேரும், பாகிஸ்தான் தரப்பில் 9 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர். இறுதியாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஏ.ஏ.கே நியாஜியும், 90 ஆயிரம் வீரர்களும், இந்திய வீரர்களிடம் சரணடைந்தனர்.

அண்டை நாட்டிடம் கொண்ட வெற்றியால் இறுமாந்து நிற்காமல், உலக வரலாற்றில் எந்த நாடும் நடந்து கொள்ளாத பெருந்தன்மையைக் காட்டியது இந்தியா. சரணடைந்த வீரர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவித்ததுடன், கைப்பற்றிய 15 ஆயிரம் சதுர மைல் பரப்பளவு இடத்தையும் திரும்பிக் கொடுத்தது. இந்தியாவின் இந்தச் செயல், உலக அரங்கையே திரும்பிப் பார்க்கச் செய்தது.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, தீவிரவாதத்தை அன்றும், இன்றும் ஊக்குவித்துவரும் பாகிஸ்தான், அதன் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனால், அன்பையும், அமைதியையும் விரும்பும் இந்திய தேசமோ வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments