கோவில் கோவிலாய் இந்த 10 தல மன்மதன் பார்த்த வேலைய பாருங்க.. கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு வலை.!

0 42512

சென்னையில் மேட்ரிமோனியல் மூலம், பல்வேறு கோவில்களில் அடுத்தடுத்து பெண்களைத் திருமணம் செய்து, நகைகளுடன் மாயமான, கோயமுத்தூரைச் சேர்ந்த மாப்பிள்ளையைப் போலீசார் தேடி வருகின்றனர்.

10க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பப் பெண்களை, வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றித் திருமணம் செய்தவரின் மோசடி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

திருமண இணையதளங்கள் மூலம் பெண் வீட்டார்களின் காதில் பூச்சுற்றி , பல பெண்களை ஏமாற்றி மணந்து அவர்களது வாழ்வில் நுழைந்த விபரீத வில்லன் விஜயகுமார் இவன் தான்..!

ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, குடும்பத்துடன் வந்த பட்டாபிராமைச் சேர்ந்த நித்திய லெட்சுமி என்ற பெண், புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் 10க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து மோசடி செய்த கோயமுத்தூரைச் சேர்ந்த கேடி மாப்பிள்ளை விஜயகுமார் என்பவரால் தனது வாழ்க்கையே வீணாகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் நித்திய லெட்சுமியின் குடும்பத்தினருக்கு அறிமுகமான கோயமுத்தூரைச் சேர்ந்த விஜயகுமார், கடந்த ஆண்டு ஏப்ரம் மாதம், பட்டாபிராம் தேவி நாகவல்லி அம்மன் கோவிலில் வைத்து, இரு வீட்டார் முன்னிலையில் நித்திய லெட்சுமியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்போது வரதட்சணையாக 15 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தைப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

தற்போது நித்தியலட்சுமிக்கு 8 மாத ஆண்குழந்தை உள்ள நிலையில், வேலைக்குச் செல்வதாக கூறிச்சென்றவர் திரும்பிவரவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நித்தியலட்சுமியின் தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண், நீங்கள் யார் எனது கணவர் விஜயகுமாரோடு திருமணமானது போல் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டு உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.

நாதஸ்ரீ என்ற அந்த பெண்ணை விஜயகுமார், கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி வில்லிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ பாலியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதோடு, நகை பணத்தை சுருட்டிக் கொண்டு சில நாட்களில் அந்தப்பெண்ணையும் ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணுடன் விஜயகுமார் ஓடி விட்டதை அந்தப்பெண் மூலமாகவே நித்திய லட்சுமி தெரிந்து கொண்டார்.

மேட்ரிமோனியல் இணையதளங்களில் மணமகள் தேவை என பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உள்ளது அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் குறிப்பிட்டுள்ள பெண்களின் பெயர்கள் மூலமாக அம்பலமாகி உள்ளது.

பெண் வீட்டாரிடம் வரதட்சணையாகப் பெறும் பணம் மற்றும் நகைக்காக, விஜயகுமார், அவரது தங்கை ரேவதி, தந்தை சக்திவேல், தாய் அம்சவேணி ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து திட்டமிட்டு திருமணம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் நித்தியலட்சுமி அந்த புகாரில் தெரிவித்துள்ளார்

மேலும் நித்தியலட்சுமி விஜயகுமாருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி வருவதாகவும் அவனை கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதோடு, தாங்கள் கடன் பட்டு வரதட்சணையாகக் கொடுத்த நகை மற்றும் பணத்தை போலீசார் மீட்டுத்தரவேண்டும் என்று நித்திய லெட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது மகளின் வாழ்க்கை போல் வேறு எந்தப் பெண்ணும் ஏமாந்து விடக் கூடாது என்றும், எனவே அவனை பிடித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்கக் கூறினார்.

அனைத்து மகளிர் போலீசாரிடம் புகைப்பட மற்றும் இன்ஸ்டாகிராம் சாட்டிங் ஆதரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஊர் ஊராக கோவில் கோவிலாக நித்திய கல்யாணம் செய்து பெண்களை ஏமாற்றி விட்டு 10 பெயர்களில் மன்மதனாக வலம் வரும் அந்த கோயமுத்தூர் மாப்பிள்ளையை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

அதே நேரத்தில் திருமண இணையதளங்களில் மாப்பிள்ளை தேடுவோர் உஷாராக இல்லாவிட்டால் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த திருமண மோசடி சம்பவம் உதாரணம்.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments