கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் நாள் குறித்த கொலையாளிகள்.!

0 5449

திருச்சி அடுத்த திருவெறும்பூரில், கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் குறிப்பிட்டபடியே , தம்பியின் கொலைக்கு பழிக்குப் பழியாக இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்த பெலிக்ஸ் தாம்சன்ராஜ் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது மர்மக்கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த திருவெறும்பூர் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டது தெரியவந்தது. திருச்சி பொன்மலைப்பட்டி கடைவீதியில் கடந்த செப்டம்பர் மாதம் சின்ராஜ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அந்த கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அலெக்ஸ் என்பவரின் தம்பி தான் தற்போது கொல்லப்பட்ட பெலிக்ஸ் தாம்சன்ராஜ் என்று கூறப்படுகின்றது.

சின்ராஜின் இறுதிச் சடங்கின் போது அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் 'விரைவில்' என்ற வாசகம் ஒன்று சூசகமாக இடம்பெற்றிருந்தது. அதன்படி பெளிக்ஸ் தாம்சன் ராஜுவை கொலை செய்தது சின்ராசுவின் அண்ணன்கள் என்பது தெரியவந்ததால் பொன்மலைப்பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதி மற்றும் சங்கிலியாண்டபுரம் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த சின்ராஜின் அண்ணன்கள் சக்திவேல், ரமேஷ் உள்ளிட்ட 10 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு வீச்சரிவாள் , இரண்டு கத்திகள், இரும்பு ராடு, டூவீலர் ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.இந்த கொலை வழக்கில் விரைவாக துப்புதுலக்கி கொலையாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments