ஒ சொல்றியா… ஆபாச பாடல் தேசிய கீதமாம்..! கலைப்புலி தாணு சொல்கிறார்

0 7645
ஒ சொல்றியா… ஆபாச பாடல் தேசிய கீதமாம்..! கலைப்புலி தாணு சொல்கிறார்

புஷ்பா படத்தில் ஆண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்குள்ளான, ஓ சொல்றியா என்ற பாடல் குழந்தைகள் மற்றும் பட்டி தொட்டியில் இருக்கும் இளைஞர்களின் தேசியகீதமாக வலம் வரபோகின்றது என்று கலைப்புலி தாணு பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது .

அல்லுஅர்ஜூன் நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள ஓ சொல்றியா என்ற பாடல், பெண்கள் எப்படி இருந்தாலும் அவர்களை ஆண்கள் தவறான எண்ணத்துடன் மட்டுமே பார்ப்பார்கள் என்ற அர்த்தம் தொனிக்க எழுதப்பட்டுள்ளது. விவேகா எழுதியுள்ள இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார்.

இதற்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆண்கள் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சமந்தா நடனம ஆடியுள்ள சம்பந்தப்பட்ட பாடலை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் புஷ்பா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தெலுங்கில் படம் எடுத்தாலும் நடிகர் அல்லு அர்ஜுன் தமிழ்நாட்டில் பிறந்த மகன் தமிழால் உயர்ந்த மகன் என்று புகழ்ந்தார்.

ஓ சொல்றியா பாடல் பற்றி குறிப்பிட்டு பேசிய தாணு, ஓ வர்ரியா... ஓ ஓ மாமா வர்ரியா என்று பாடல் வரியை தவறாகவும் இன்னும் கொச்சையாகவும் பாடிக் காட்டியதோடு, அந்த பாடல் குழந்தைகளுக்கும், பட்டிதொட்டியில் இருக்கும் இளைஞர்களுக்கு எல்லாம் தேசிய கீதமாக அகிலமெங்கும் வர போகிறது என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆபாச பாடலை தேசிய கீதத்துடன் ஒப்பிட்டு பேசியதற்கு கலைப்புலி தாணுவுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஓ சொல்றியா... பாடலுக்கு பதில் அடி கொடுப்பதாக நினைத்து , அதே மெட்டில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விபரீத சிந்தனையில் எழுதப்பட்ட பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் ஓ சொல்றியா பாடலில் வருகின்ற ஒரு வரியை 2004 ஆம் ஆண்டிலேயே, தனது 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் செல்வராகவன் வசனமாக வைத்து விட்டதாக கூறி பாடலாசிரியர் விவேகாவின் கவிதை திருட்டையும் போட்டு உடைத்துள்ளனர்.

ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் எதிர்ப்பு ஒரு பக்கம் , சமூக வலைதளங்களில் வருத்தெடுக்கும் நெட்டிசன்கள் மறுபக்கம் என்று புஷ்பா படத்தை சுற்றி சர்ச்சைகள் வேகமாக வட்டமடிக்க தொடங்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments