ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பரிசோதனை..!

0 2413
ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பரிசோதனை..!

நாடு முழுக்க ஒமைகரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உருமாற்றம் அடைந்த கொரோனோ வைரசான ஒமைக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. டெல்லியில் ஏற்கனவே 2 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் முதல்முதலில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்குள்ளான 37 வயதானவர் குணமடைந்து லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். டெல்லியில் ஒமைக்ரான் தொற்று இன்னமும் சமூக பரவலாக மாறவில்லை என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

இதனிடையே மகாராஷ்ட்ராவில் 28 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும், கர்நாடகத்தில் 3 பேரும், குஜராத்தில் 4 பேரும், கேரளா, ஆந்திராவில் தலா ஒருவரும், சண்டிகரில் ஒருவரும், டெல்லியில் 6 பேரும் என நாடு முழுக்க 53 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒமைக்ரான் தொற்றால் அதிக பாதிப்புகள் கொண்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முன்பதிவு கட்டாயம் என மத்திய விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய 6 சர்வதேச விமான நிலையங்களில் 20ம் தேதி முதல் முன்பதிவு செய்தல் அமலுக்கு வருவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதில், அதிக பாதிப்புகள் கொண்ட நாடுகளில் இருந்தோ, அல்லது 14நாட்களுக்குள் அந்த நாடுகளுக்கு சென்று மற்ற நாடுகளில் இருந்து வந்தாலோ அவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பே கொரோனா பரிசோதனைக்கு முன் பதிவினை செய்துள்ளனரா என சரிபார்க்க வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், சந்தேகத்தின் பேரில் ஒமைக்ரான் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். நைஜீரியாவில் இருந்து வந்தவர்கள் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments