கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரங்கு கட்டுப்பாடுகள் வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்த தமிழக அரசு, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் கடற்கரைகளில் கூட தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 15ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இதனை அடுத்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், ஒமைக்ரான் வகை தொற்றை கருத்தில் கொண்டும் வரும் 31ஆம் தேதி வரை ஊடரங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் நோய்ப்பரவலை கட்டுப்படுத்தும் வகையில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் தமிழகத்தில் அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல், 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அண்டை மாநிலங்களில் ஒமைக்ரான் பரவுவதை கருத்தில் கொண்டு பண்டிகை காலத்தில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பொது இடங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய தமிழக அரசு, நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண் வரையறை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments