இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க விரும்புவதாக பாகிஸ்தான் மீது ராஜ்நாத் குற்றச்சாட்டு..!

0 1420

இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பாகிஸ்தான் விரும்புவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். 1971ஆம் ஆண்டுப் போரில் பாகிஸ்தானின் திட்டங்களை இந்தியப் படைகள் முறியடித்ததைப் போல், இப்போதும் பயங்கரவாதத்தை வேருடன் களையப் பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியாவின் வெற்றி, வங்கதேச - இந்திய நட்புறவு ஆகியவற்றின் ஐம்பதாம் ஆண்டு விழாவை டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், ஹெலிகாப்டர் விபத்தில் 13 இறந்ததால் போர் வெற்றி விழாவை எளிமையாகக் கொண்டாடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

1971ஆம் ஆண்டுப் போரில் துணிச்சலுடன் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்குத் தலைவணங்குவதாகவும், வீரர்களின் தியாகத்துக்கு நாடு எப்போதும் கடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வங்கதேசத்தை உருவாக்குவதில் இந்தியாவின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அவர், கடந்த ஐம்பது ஆண்டுகளில் வளர்ச்சியை நோக்கிய பாதையில் வங்கதேசம் முன்னேறிச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.  

1971ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போர் குறித்த படக் காட்சியையும், அந்தப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் கண்காட்சியையும் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்துப் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments