வாந்தி, வயிற்றுப்போக்கு 2 குழந்தைகள் பலி: பொரித்த மீன், முட்டை காரணமா?

0 3455
வாந்தி, வயிற்றுப்போக்கு 2 குழந்தைகள் பலி: பொரித்த மீன், முட்டை காரணமா?

வேலூர் அருகே கடையில் வாங்கி வந்த பொரித்த மீனை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள், வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல்நலம் சரியில்லாத குழந்தைகளை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட காலதாமதம் அவர்களின் உயிரை பறித்துள்ளது. 

வேலூர் கஸ்பா பஜார் பகுதியைச் சேர்ந்த அன்சர் - சுரையா தம்பதிக்கு 4 வயதில் ஆஃப்ரின் என்ற குழந்தையும், 3வயதில் அசன் என்ற குழந்தையும் இருந்தது. கடந்த 7ஆம் தேதி பணிக்கு சென்று வீடு திரும்பிய ஆட்டோ ஓட்டுநரான அன்சர், கடையில் இருந்து பொரித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அந்த பொறித்த மீனை சாப்பிட்டுவிட்டு, குழந்தைகள் இருவரும் முட்டையும் சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில், 11 மணிக்கு மேல் இருவருக்கும் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

மறுநாள் காலையில் ஆப்ரினையும், அசனையும் தர்ஹாவுக்கு அழைத்துச் சென்று தாயத்து கட்டிவிட்ட அன்சர், அதற்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையின்றி அங்கிருந்த மஹி என்ற மெடிக்கலில் மாத்திரையும், டானிக்கும் வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அந்த மாத்திரை மருந்தை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகள் இருவரும் மயங்கி, சுயநினைவை இழந்துவிட்ட நிலையில், அதற்கு பிறகு தான் தனது ஆட்டோவிலேயே குழந்தைகளை வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அன்சர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பெற்ற குழந்தைகள் சடலங்களாக கிடப்பதை கண்டு, அவர்களது தாய் பரிதவிக்கும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தைகள் இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும் என்ற நிலையில், கஸ்பா பஜார் பகுதியில் வீடுவீடாக குடிநீர் மாதிரிகளை எடுத்து சுகாதார பணியாளார்கள் சோதனை செய்து வருகின்றனர். பெரியவர்களாக இருந்தால் தமக்கு என்ன செய்கிறது, உடலில் ஏற்படும் அசௌகரியங்களை தெளிவாக சொல்வார்கள். ஆனால், குழந்தைகளுக்கு அப்படி சொல்லத் தெரியாது. ஆகையால், குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments