அலட்சிய அரசு ஓட்டுநரின் தவறால், கடும் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்..!

0 4238

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு பாலாறு பாலத்தின் மீது தவறான திசையில் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநரால் ஆம்புலன்ஸ் உட்பட ஏராளமான வாகனங்கள் நெரிசலில் சிக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆயிரக்கணக்கான வாகனங்களின் போக்குவரத்துடன் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். செங்கல்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரட்டைப் பாலங்களின் மீது வார இறுதி நாட்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வது வழக்கம்.

அப்பகுதிலுள்ள சுங்கச்சாவடிகளிலும் வார இறுதி நாட்களில் கடுமையான வாகன நெரிசலைக் காணலாம். அப்படி சனிக்கிழமை மாலை சென்னை - திருச்சி மார்க்கத்தில் பாலத்தின் மீது லேசான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன.

சென்னையில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநர் ஒருவர் பொறுமை காக்காமல் எதிர் திசையில் அதாவது திருச்சி - சென்னை மார்க்கமாக வாகனங்கள் செல்லும் பாலத்தின் மீது செல்ல முற்பட்டுள்ளார்.

அந்தப் பேருந்தை பின் தொடர்ந்து வந்த 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களும் பேருந்தின் பின்னாலேயே சென்றுவிட்டனர். பேருந்து பாதி பாலத்தை அடைந்த நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சரக்குகளை ஏற்றி வந்த கனரக வாகனங்கள் பேருந்தை கடந்து செல்ல முடியாமல் முடங்கி நிற்க, அவ்வழியாக நோயாளியை ஏற்றிக் கொண்டு சைரன் சப்தத்தோடு வந்த ஆம்புலன்ஸ் ஒன்றும் இந்த நெரிசலில் சிக்கியது. சென்னையில் இருந்து மேல் மலையனூர் நோக்கிச் சென்ற மருத்துவர் தமிழ்வேந்தன் என்பவர் இந்தக் காட்சிகளை தனது செல்போனில் ஆதங்கத்துடன் வீடியோ எடுத்துள்ளார்.

வீடியோ எடுத்த மருத்துவர் தமிழ்வேந்தன் தொடர்ந்து 108க்கு அழைத்து இந்த போக்குவரத்து நெரிசல் தொடர்பான தகவலை போலீசாருக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அரசுப் பேருந்து சரியான திசையில் சென்றிருந்தால் சில நிமிடங்களே தாமதம் ஏற்பட்டிருக்கும் என்றும் எதிர் திசையில் தவறான பாதையில் சென்றதால் பல மணி நேரமாக நெரிசலில் சிக்கி, மற்ற வாகனங்களும் பாதிக்கப்பட்டதாக மருத்துவர் தமிழ்வேந்தன் வேதனை தெரிவிக்கிறார். 

சிக்னலை மீறுவது, சாலையில் எதிர் திசையில் செல்வது என ஒரு சில அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் செய்யும் இதுபோன்ற அலட்சியமான சேட்டைகளால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதோடு, சக அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments