நால்வழிச் சாலையில் விபத்து.. மருத்துவ மாணவியர் 2 பேர் உட்பட 3 பேர் பலி..!
திருநெல்வேலியில் நால்வழிச் சாலையில் தறிகெட்டுத் தாறுமாறாக ஓடிய கார் நடுத் தடுப்பைத் தாண்டி எதிர்புறம் சென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவர் உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மாணவி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த சண்முகசுந்தரமும், அவர் நண்பர்கள் மூவரும் தூத்துக்குடி விமான நிலையத்துக்குக் காரில் சென்றுகொண்டிருந்தனர். திருநெல்வேலி அருகே ரெட்டியார்பட்டி நால்வழிச்சாலையில் இன்று காலை பத்தரை மணியளவில் கார் வந்தபோது முன்பக்க டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுத்தடுப்பைத் தாண்டி எதிர்ப்புறம் சென்று அங்கு வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதித் தலைகுப்புறக் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மாணவியரான தென்காசி மாவட்டம் ஆவுடையானூரைச் சேர்ந்த திவ்ய காயத்ரி, மதுரை பரசுராமன்பட்டியைச் சேர்ந்த பிரீடா ஏஞ்சலின் ராணி ஆகியோரும், காரில் வந்த சண்முகசுந்தரமும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த கடையநல்லூரைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி திவ்யபாலாவும், காரில் வந்த சண்முகசுந்தரத்தின் நண்பர்கள் மூவரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் விபத்து நேர்ந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மாணவியர் மூவர் ஒரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் கல்லூரி நேரத்தில் ரெட்டியார்பட்டி நோக்கி எதற்குச் சென்றார்கள் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. சாலை விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியர் இருவர் உயிரிழந்தது மாணவியரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments