ஜீன்ஸ் ஐஸ்வர்யாராயும்... பேக் ஐடி ஐஸ்வர்யாவும்... டபுள் ஆக்ட் லவ் சீட்டிங்..! ரூ 34 லட்சம் அபேஸ்

0 4145
ஜீன்ஸ் ஐஸ்வர்யாராயும்... பேக் ஐடி ஐஸ்வர்யாவும்... டபுள் ஆக்ட் லவ் சீட்டிங்..! ரூ 34 லட்சம் அபேஸ்

முகநூலில் போலிக் கணக்கு மூலம் அக்கா, தங்கை என இரட்டை வேடத்தில் நடித்த பெண் ஒருவர், இரு இளைஞர்களை காதலிப்பதாக ஏமாற்றி 34 லட்சம் ரூபாய் பணம் பறித்த சம்பவம் சென்னை அம்பத்தூரில் அரங்கேறி உள்ளது. முகநூலில் 'டபுள் ஆக்ட்' கொடுத்து போலீஸ்காரருக்கு மொட்டை போட்ட 'கேடி- லேடி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

நடிகை ஐஸ்வர்யாராய் , தன்னை அக்காள், தங்கை எனக்கூறி இரட்டையர்களான நாயகர்களுக்கு டேக்கா கொடுக்கும் காட்சிகளை ஜீன்ஸ் படத்தில் பார்த்திருக்கிறோம்.

அதே பாணியில் முகநூலில் போலியான புகைப்படம் மூலம் தன்னை அக்காள், தங்கையாக டபுள் ஆக்ட் கொடுத்து சகோதரர்களிடம் 24 லட்சம் ரூபாயை சுருட்டிய ஆவடியைச் சேர்ந்த கேடி லேடி ஐஸ்வர்யா இவர்தான்..!

சிவகங்கை மாவட்டம் மூலக்கரை கிராமத்தைச் சார்ந்தவர் பாரதிராஜா. திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் போலீஸ்காரராக உள்ள இவர் கடந்த 3 மாதங்களாக சென்னை, திருவொற்றியூரில் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் பாரதிராஜாவின் முகநூல் பக்கத்தில், ஆவடி, ஆனந்தம் நகர், பாரதிதாசன் தெருவைச் சார்ந்த ஐஸ்வர்யா என்ற 26 வயது இளம்பெண் நட்பாகி உள்ளார்.

தான் டாக்டருக்கு படித்து வருவதாக கூறிய ஐஸ்வர்யா, பாரதிராஜாவை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி செல்போனில் அடிக்கடி மயக்கும் வகையில் பேசி வந்துள்ளார். இதன் பிறகு, திருமணம் செய்து கொள்வதாக ஆசையைத் தூண்டி அதற்காக பூஜை செய்யவும், நகைகள் வாங்கவும் பணம் வேண்டும் என பாரதிராஜாவிடம் முதல் தவணையாக 4லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். பாரதிராஜா அந்த பணத்தை ஐஸ்வர்யாவின் தந்தை பழனியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக 8 லட்சம் என மொத்தமாக 14 லட்சம் ரூபாயை பாரதிராஜாவிடம் இருந்து கூகுள் பே மூலம் வாரிச் சுருட்டியுள்ளார் ஐஸ்வர்யா.

இதற்கிடையில், தனக்கு ஒரு தங்கை இருப்பதாக ஐஸ்வர்யா கூறியதை நம்பி, பாரதிராஜா, தனது பெரியப்பா மகன் மகேந்திரன் என்பவரை ஐஸ்வர்யாவுக்கு முகநூல் மூலம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மகேந்திரனிடம் ஐஸ்வர்யா தனது தங்கை என்று ஒரு பெண்ணின் முகநூல் கணக்கை அறிமுகப்படுத்தி வைத்தார்.

மகேந்திரனிடம் பேசிய அந்தப்பெண் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 6மாத காலத்தில் அவரிடம் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக 20 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றதாக கூறப்படுகின்றது. அந்தப்பெண்ணின் சொக்கவைக்கும் குரலுக்கு மயங்கிய மகேந்திரன், ஒரு சவரன் தங்க சங்கிலியும், ஒரு ஜோடி கொலுசுகளையும் கொரியர் மூலம் காதல் பரிசாக வாங்கி அனுப்பி வைத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அக்காள் ஐஸ்வரியா மற்றும் அவரது தங்கை ஆகியோர் பாரதிராஜா மற்றும் மகேந்திரனுடனான தொடர்பைத் துண்டித்துள்ளனர்.

இதனையடுத்து பணத்தை பறிகொடுத்த காவலர் பாரதிராஜா, அவரது சகோதரர் மகேந்திரன் ஆகிய இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்து சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் விசாரணையை முன்னெடுத்த ஆவடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், முக நூலில் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து பணம் பறித்த பேக் ஐடி ஜஸ்வர்யாவைக் கைது செய்தனர்.

நிஜ ஐஸ்வர்யாவை பார்த்த சகோதர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. முகநூல் புகைப்படத்தில் சினிமா நடிகை போல அழகாகத் தெரிந்த ஐஸ்வர்யா, நிஜத்தில் அவ்வாறு இல்லாததைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். உண்மையில் ஐஸ்வர்யா டாக்டரும் இல்லை, அவருக்கு தங்கை என்று யாரும் இல்லாத நிலையில் அவரே இரு போலியான முகநூல் கணக்கு மூலமாக அக்காள், தங்கை என போலியான புகைப்படங்களை காட்டி, டபுள் ஆக்ட் கொடுத்து பாரதிராஜாவிடமும், மகேந்திரனிடமும் மாறி மாறி செல்போனில் மயக்கும் குரலில் பேசி அல்வா கொடுத்தது தெரியவந்தது

முகநூலை பொழுது போக்குவதற்கும், பயனுள்ள நல்ல தகவல்களை பெறுவதற்கும் பயன்படுத்துவதை விட்டு, உறவுகளை தேடவும், காதலை வளர்க்கவும் பயன்படுத்தினால் இது போன்ற பேக் ஐடி கேடிகளிடம் சிக்கி மொத்த பணத்தையும் இழந்து காவல் நிலையம் முன்பு தவிக்கின்ற பரிதாபம் அரங்கேறும் என்பதற்கு இந்தச்சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments