அருவிபோல் ஊற்றும் தண்ணீரும்... நிரம்பாத அதிசயக் கிணறும் : வியக்கும் மக்கள்

0 33858

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே எவ்வளவு நீர் சென்றாலும் உள்வாங்கிக் கொண்டு எப்போதுமே நிரம்பாத அதிசயக் கிணறு பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழையில் ஏரிகள், குளங்கள், கிணறுகள் என யாவும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் நெல்லை அருகே எவ்வளவு தண்ணீர் வந்தாலும் உள்வாங்கும் அதிசயக் கிணறு ஒன்று பலரையும் தன்னை நோக்கி இழுத்து வருகிறது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது ஆயன்குளம் படுகை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பெய்து வரும் தொடர் கனமழையில் ஆயன்குளம் படுகை நிரம்பியுள்ளது.

இந்தப் படுகையிலிருந்து வெளியேறும் தண்ணீரானது அருகில் தனியாருக்குச் சொந்தமான கிணறு ஒன்றுக்கு வாய்க்கால் வழியாகச் செல்கிறது. அத்துடன் கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணை தேக்கத்திலிருந்து திறக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் கனஅடி தண்ணீரின் ஒரு பகுதியும் இந்த கிணற்றுக்குத்தான் செல்கிறது.

சுமார் 50 கன அடி தண்ணீர் அந்தக் கிணற்றுக்குள் அருவில்போல் ஊற்றுகிறது. பல நாட்களாக தண்ணீர் கிணற்றுக்குள் செல்லும் நிலையில், கிணறு நிரம்பவே இல்லை.

மழைக்காலம் மற்றும் அணை திறப்பு காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எவ்வளவு நீர் இந்த கிணற்றுக்குள் சென்றாலும் கிணறு நிரம்பியதே இல்லை என்று கூறப்படுகிறது. இந்த அதிசய கிணற்றை சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார்.

இந்தக் கிணற்றுக்குள் விழும் தண்ணீர் எங்கே செல்கிறது என்ற முறையான ஆய்வு இதுவரை செய்யப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், அப்பகுதி விவசாயிகள், கிணற்றுக்குள் தெர்மாக்கோல் துண்டுகளையும் பூக்களையும், சிறு சிறு பாசிகளையும் உள்ளே போட்டு, அவை எங்கே செல்கிறது என பார்த்ததாகவும் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணறுகளில் அவை மிதந்ததாகவும் கூறுகின்றனர்.

இந்த அதிசயக் கிணற்றால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்வதாகக் கூறும் விவசாயிகள், உப்பு நீர் நன்னீராக மாறுவதாகவும் கூறுகின்றனர்.

தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, வீணாகக் கடலில் சென்று கலக்கும் தண்ணீரை இந்தக் கிணற்றுக்கு திருப்பிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments