"துடைக்கும்போது" வெடித்த துப்பாக்கி ? தோள்பட்டையில் பாய்ந்த குண்டு
சென்னையில் பிரபல பெண் மருத்துவரின் கணவர் தோளில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை அடையாறு எல்.பி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் பிரபல தோல் சிகிச்சை மருத்துவரான பைரவி. போயஸ் தோட்டத்தில் மருத்துவமனை வைத்து நடத்தி வரும் பைரவி சில மாதங்களுக்கு முன்பு நடிகை ரைசா முகம் வீங்கி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் சிகிச்சை சம்பந்தமன சர்ச்சைக்கு உள்ளானவர்.
சனிக்கிழமை நள்ளிரவு எட்டாவது மாடியில் உள்ள மருத்துவர் பைரவி வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சாஸ்திரிநகர் போலீசார் வந்து பார்த்தபோது பைரவியின் கணவரும் தொழிலதிபருமான செந்தில் தோள்பட்டையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இடது பக்க தோள்பட்டையில் குண்டு பாய்ந்து தற்போது சிகிச்சை பெற்று வரும் செந்திலின் உயிருக்கு ஆபத்தில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பைரவிக்கு சனிக்கிழமையன்றுதான் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் பாதுகாப்புக்காக எப்போதும் தாம் துப்பாக்கி வைத்திருப்பேன் என்றும் அதுவும் தோட்டாக்கள் நிரப்பப்பட்டு லோடிங்கில்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ள செந்தில், சனிக்கிழமை இரவு துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது தவறுதலாக வெடித்துவிட்டது எனக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
செந்திலின் தோள்பட்டையில் இருந்து துப்பாக்கி குண்டுகளை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments