கர்ணனின் காதல்... மனைவிக்கு வளைக்காப்பு... கொலையை தடுத்த நண்பன்

0 5181
கர்ணனின் காதல்... மனைவிக்கு வளைக்காப்பு... கொலையை தடுத்த நண்பன்

விருத்தாச்சலம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர், தனது மனைவியின் வளைகாப்பு அழைப்பிதழில், பெண்ணின் சகோதரரின் பெயரை அச்சிட்டதால் நிகழ்ந்த தகராறில் ஒருவருக்கு கத்திக் குத்து விழுந்தது. நண்பனைக் காப்பாற்ற சினிமா பாணியில் குறுக்கே பாய்ந்து கத்திக் குத்து வாங்கிய சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழைய நெய்வேலியை சேர்ந்தவர் கர்ணன். இவர் வேறு சாதியை சேர்ந்த கவுசிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

போலீசாரின் அறிவுறுத்தலின் படி காதல் ஜோடி விருத்தாச்சலம் பெரியார் நகரின் தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்தினர். ஒரு வருடம் கடந்த நிலையில் கர்ணனின் காதல் மனவி கவுசிகா கர்ப்பமானதால் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை சொந்த ஊரில் வைத்து நடந்த கர்ணன் முடிவு செய்தார். அதற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் ஏற்கனவே ஆத்திரத்தில் இருக்கும் பெண்ணின் சகோதாரர் வினோத்தின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது. அந்த அழைப்பிதழ் பழைய நெய்வேலியில் வீடு வீடாக கொடுக்கப்பட்டது.

இதையடுத்து வளைகாப்பு நிகழ்ச்சியின் போது, அங்கு வந்த வினோத், தனது தங்கையை காதலித்து தங்களை மீறி வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற ஆத்திரத்தில், ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்றிருக்கும் தனது பெயரை வளைகாப்பு அழைப்பிதழில் எப்படி போடலாம் ? என்று கேட்டு கர்ணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கர்ணனையும், கவுசிகாவையும் தாக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த கர்ணனின் நண்பர் சிலம்பரசன், குறுக்கே பாய்ந்து வினோத்தை தடுக்க முயன்றுள்ளார் அப்போது சிலம்பரசனுக்கு கத்தி குத்து விழுந்தது. வினோத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். தகவல் அரிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கத்தியுடன் தப்பிச்சென்ற வினோத்தை கைது செய்து , கத்தியையும் கைப்பற்றினர்.

தனது தங்கை வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததில் இருந்து கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும், தன்னை மேலும் வெறுப்பேற்றும் விதமாக தனது தங்கைக்கு உள்ளூரில் வைத்தே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியதோடு, அதில் பேச்சுவார்த்தையில்லாத தனது பெயரை அச்சிட்டு வீடு வீடாக கொடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்கியதாக வினோத் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments