எச்சரிக்கையை மீறிச் சென்று சைக்கிளை பறிகொடுத்த தர்மகர்த்தா... வெள்ளத்தில் போயே போச்சி..!

0 4397

சாத்தான்குளம் அருகே சாலையை தாண்டி மறுகால் பாய்ந்த வெள்ளத்தில் செல்ல அஞ்சி கார் மற்றும் இரு சக்கரவாகன ஓட்டிகளே தயங்கிய நிலையில், பொதுமக்களின் எச்சரிக்கையை மீறி  சைக்கிளுடன் கெத்தாக சென்ற முதியவர் ஒருவர் , வெள்ளத்தில் சிக்கி சைக்கிளை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. வெள்ளத்துக்கு சைக்கிளை தானமாக கொடுத்த தர்மகர்த்தா குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் பகுதியிலிருந்து நாசரேத் செல்லும் பிரதான சாலையில் உள்ள தரைப்பாலத்தில் கனமழையின் காரணமாக குளங்கள் நிரம்பி மறுகால் விழுந்ததன் காரணமாக வெள்ளநீர் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்து சென்றது.

வெள்ளத்தைக் கண்டு பெரிய சைஸ் கார்களே ஜெர்க் அடித்து பின்வாங்கிய நிலையில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் " இதெல்லாம் எனக்கு ஜூஜூபி" என்பது போல தரை பாலத்தை கடக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் எச்சரித்தும் கேட்காமல் சைக்கிளுடன் சர்ரென்று வெள்ளத்துக்குள் இறங்கினார்

தரைப்பாலத்தை பாதி தூரம் சைக்கிளில் கடந்த நிலையில் காட்டாற்று வெள்ளத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் முதியவர் சைக்கிளுடன் இழுத்துச்செல்லப்பட்டார்.

கரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஓடிச்சென்று முதியவரை இறுக்கப்பிடித்து கையால் தூக்கி காப்பாற்றினார்.

ஆனால் முதியவரின் சைக்கிள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. அதனை மீட்க இயலாமல் "ஐயோ என் சைக்கிள் போச்சே என்று கூச்சலிட்டபடியே வெள்ளத்துக்கு சைக்கிளை தானமாக கொடுத்த விரக்தியில் மறுகரைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே டெர்மினேட்டர் பட அர்னால்டு போல பைக்குடன் வெள்ளத்தை கடக்க முயன்ற பைக் பாக்சர் ஒருவர்,வெள்ளத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் சிக்கி திணறி ஒரு வழியாக அதிர்ஷட வசமாக மறுகரையை தொட்டார்

இந்த இரு சம்பவங்களும் பார்ப்போருக்கு நகைப்பை வரவழைத்தாலும், உண்மையில் சாலை மற்றும் தரைப்பாலத்தை மூழ்கடித்துச்செல்லும் வெள்ளத்தை கடந்து விடலாம் என்று மெத்தனத்துடன் வாகனங்களை ஓட்டிச்செல்லும் விபரீத வாகன ஓட்டிகளுக்கு ஒரு எச்சரிக்கைப்பாடம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments