காருக்குள்ளே யாரு... வடமாநில கேடி பாரு.... கண்ணாமூச்சிக்கு END..! கார் அனுப்புவதில் மோசடி உஷார்

0 4809
காருக்குள்ளே யாரு... வடமாநில கேடி பாரு.... கண்ணாமூச்சிக்கு END..! கார் அனுப்புவதில் மோசடி உஷார்

டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் கொண்டுவரப்பட்ட காரை வைத்துக் கொண்டு பேரம் பேசி பணம் பறிக்க முயன்ற வட மாநில ஆசாமியை விடாமல் துரத்திய நிலையில் பெங்களூரில் வைத்து கார் மீட்கப்பட்டது. காருக்கு அடியில் சாவியை மறைத்து வைத்துவிட்டு ஓடிய நபரின் கண்ணாமூச்சி ஆட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொழில் செய்து வரும் டெல்லியைச் சேர்ந்தவர் சச்சின் குமார் மண்டல். இவர் தனக்கு சொந்தமான டயோட்டா குரொல்லா காரை கோவில்பட்டிக்கு கொண்டு வருவதற்காக டெல்லியில் உள்ள இண்டியன் கார்கோ சர்வீஸ் என்ற தனியார் பார்சல் நிறுவனத்திடம் புக்கிங் செய்தார்.

காரை அவரது வீட்டில் இருந்து எடுத்துச்சென்று கண்டெய்னரில் ஏற்றி கோவில்பட்டிக்கு அனுப்புவதற்கு முன்பணமாக 10 ஆயிரம் ரூபாயை வழங்கியுள்ளார். மீதமுள்ள தொகையான 9 ஆயிரம் ரூபாயை காரை ஒப்படைத்து விட்டு பெற்றுக் கொள்வதாக அந்த நிறுவனத்தினர் கூறிய நிலையில், காருடன் மதுரைக்கு வந்த ஆசாமி, அதனை கையில் வைத்துக் கொண்டு, மீதித்தொகையான 9 ஆயிரம் ரூபாயும், கூடுதலாக 10 ஆயிரம் ரூபாயும் கூகுள் பே மூலம் பெற்றுக் கொண்டு, காரைக் கொடுக்காமல் கண்ணாமூச்சிக்காட்டி ஊர் ஊராக இழுத்தடித்து வந்தான்.

இரு தினங்களாக அலைக்கழிக்கப்பட்ட நிலையில், சச்சின் குமாருக்கு உதவியாக லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி கணேஷ்குமார் தீவிர முயற்சி மேற்கொண்டார். காரை மீட்டுக் கொடுக்கும்படி மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் காரை தேட முற்படாத நிலையில் காருடன் கண்ணாமூச்சி ஆடிய சம்பந்தப்பட்ட ஓட்டுனரின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து வீடியோ காலில் தொடர்பு கொண்ட கணேஷ்குமார் இந்தியில் பேசி அவன் எங்கிருந்து பேசுகிறான் ? என்பதை சாமர்த்தியமாக கண்டுபிடித்தார்.

கார்கோ நிறுவனம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள தகவலை, காருடன் சுற்றும் ஆசாமியிடம் கூறியதால் மிரண்டு போன ஆசாமி காரை பெங்களூரிலேயே நிறுத்தி விட்டு உடனடியாக விமானம் மூலம் டெல்லி சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து பெங்களூரு லாரி உரிமையாளர் சங்கத்தினர் மூலம், சச்சின் குமாரின் கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்தனர். கார் பெங்களூரில் உள்ள பீப்பிள் ட்ரீ மருத்துவமனை கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அறிந்து அங்கு விரைந்தனர்.

அங்கிருந்த வாகன நிறுத்த ஒப்பந்ததாரர்கள் பார்க்கிங் ரசீது கொடுத்தால் தான் காரை எடுத்துச்செல்ல முடியும் என்று கண்டிப்புடன் கூறினர். இதையடுத்து தப்பி ஓடிய டிரைவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தன்னை போலீசில் பிடித்து கொடுத்து விடுவீர்களோ ?என்ற அச்சத்தில் காரை பெங்களூரில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பியதாக தெரிவித்த அவன், காரில் முன்பக்க டயருக்கு மேல்பகுதியில் காரின் சாவியை மறைத்து வைத்திருப்பதாகவும் , காருக்குள் பார்க்கிங் ரசீது இருப்பதாகவும் தெரிவித்தான். இதையடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த காரின் சாவியை எடுத்த கணேஷ்குமார் , காருக்குள் இருந்த ரசீதை எடுத்து கொடுத்து காரை சச்சின் குமாரிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து தங்களுக்கு கார் கிடைக்க உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்த கணேஷ்குமார், சச்சின்குமார் ஆகியோர் அந்த காருடன் இருவரும் பத்திரமாக கோவில்பட்டிக்கு திரும்பினர்.

கார்கோக்கள் மூலமாக வட மாநிலங்களில் இருந்து கார்களை அனுப்புவோர், மிகவும் கவனமாக நிறுவனத்தின் நம்பக்கத்தனமையை அறிந்து ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் மோசடி நபர்களிடம் சிக்கி பணத்தை பறிகொடுக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு எச்சரிக்கை பாடம்..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments