மாணவி தற்கொலை விவகாரம்... சிக்கிய ஆசிரியரின் டைரி குறிப்பு... ''நான் எந்த தவறும் செய்யவில்லை''

0 4781
மாணவி பாலியல் தொல்லை விவகாரம்.. மாணவர்கள் தம்மை தவறாக நினைப்பதாக, கடிதத்தில் குறிப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட கணித ஆசிரியர்..

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் டைரி குறிப்பு போலீசாரின் கையில் சிக்கியுள்ளது. 

பாலியல் தொல்லை காரணமாக, சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12-ம் ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மாணவி படித்த தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் குறித்து இதுவரை துப்பு துலங்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மாணவி படித்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணன் என்பவர் திடீரென நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. கரூர் மாவட்டம் குப்பிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் நேற்றைய தினம் மதியத்தோடு பள்ளியில் விடுப்பு எடுத்துவிட்டு, திருச்சி மாவட்டம் செங்காட்டுபட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய சோதனையில், சரவணன் எழுதியதாக கூறப்படும் டைரி குறிப்பு சிக்கியுள்ளது. அந்த குறிப்பில், மாணவியின் தற்கொலைக்கு தாம் தான் காரணம் என மற்ற மாணவர்கள் தன்னை தவறாக நினைப்பதாகவும், அது அவமானமாக இருப்பதால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபத்தில் சில சமயங்களில் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டிருப்பதாகவும், மற்றபடி எந்த தவறும் செய்யவில்லை எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தினரிடமும், மாணவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் சரவணன் அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த டைரி குறிப்பை கைப்பற்றியுள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலைக்கும், சரவணனுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?, சரவணனை மாணவர்கள் தவறாக பேசியதாக கூறப்படுவதற்கு காரணம் என்ன? என்பன குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments