பெண்ணை காரில் கடத்திய குடிகார மென்பொறியாளர்கள்... கதறிய நிலையில் மீட்ட காவலர்!

0 3971

சென்னை நட்சத்திர ஓட்டலில் பார்ட்டிக்குச்சென்ற பெண்ணை காரில் கடத்திச்சென்ற 3 மென் பொறியாளர்களை, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் சுற்றிவளைத்து மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில், அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக சென்ற கார் ஒன்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சாலையில் இலங்கை தூதரகம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த, தேவசகாயம் என்ற காவலர் அந்த காரை மடக்கி நிறுத்தியுள்ளார்.

காரை சோதனை செய்தபோது, காரில் இருந்த இளம்பெண் ஒருவர் கூச்சலிட்டு கொண்டே தனது செருப்பை எடுத்து உடனிருந்த இளைஞர்களை ஆவேசமாக தாக்கியுள்ளார். உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிந்து சம்பவம் இடத்திற்கு வந்தனர்.

விசாரணையில் மென் பொறியாளரான 23 வயதான அந்த பெண் போரூரில் தங்கி பணி புரிந்து வருவது தெரியவந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் புதன்கிழமை நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மென்பொறியாளர்கள் கௌதம், தீபக், சக்தி ஆகிய மூவரும் பழக்கமாகி நட்பாகி பேசியுள்ளனர். அனைவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதிகாலை 3 மணியளவில் அந்த இளம் பெண்ணை, அவர் தங்கியிருக்கும் அறையில் கொண்டு விடுவதாக கவுதம் கூறியதை நம்பி காரில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது காருக்குள் வைத்து அந்த பெண்ணிடம் காரில் இருந்த கவுதம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இதையடுத்து காரை நிறுத்தச்சொல்லி அவர் கூச்சலிட்டதாகவும், அத்தகைய சூழலில் தான் அந்தப்பெண்ணின் சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் மடக்கி பிடித்ததால் விபரீதம் நடக்காமல் காப்பாற்றப்பட்டதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரை பெற்று அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்த போலீசார், வழக்கை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கவுதம் உள்ளிட்ட மூவரிடமும் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். வேலூரைச் சேர்ந்த மூவரும் துரைப்பாக்கத்தில் தங்கி மென் பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கௌதம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கவுதம் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்ணை மானபங்கம் செய்தல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் மிரட்டி அவமதித்தல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். கவுதமனின் நண்பர்களான தீபக் மற்றும் சக்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தின் மூலம் நள்ளிரவை தாண்டியும், நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்து நடப்பது அம்பலமாகி உள்ளதால் போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments